மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Loading

திருவள்ளூர் அடுத்த அரும்பாக்கம் கிராமத்தில் மாரியம்மன் கோயிலை இடித்து சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் : 

திருவள்ளூர் பிப் 02 : திருவள்ளூர் அடுத்த அரும்பாக்கம் கிராமத்தில் திரளான மக்கள் காலம் காலமாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த மாரியம்மனை அப்பகுதி மக்கள் காலம் காலமாக வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த மாரியம்மன் கோவிலை மர்ம நபர்கள் சிலர் இடித்து  சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து அரும்பாக்கத்தை சேர்ந்த பொதுமக்கள் தாசில்தார் மற்றும் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும், இதுநாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் மெத்தனமாக இருந்து வத்தனர். மேலும் புகார் அளித்தவர்களை, எதிர் தரப்பினர் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்ப்பட்ட  பொதுமக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் நாங்கள் 60 ஆண்டு காலமாக வழிபட்டு வந்த மாரியம்மன் கோவிலை இடித்து அகற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் தங்களது ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க போவதாக கூறி ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மு.பிரதாப்பிடம் அளித்தனர்.அந்த மனுவை பெற்றுக் கொண்ட அவர் மனு மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
0Shares