2026ஆங்கிலபுத்தாண்டை வரவேற்று ஹென்றி வாழ்த்து
![]()
2026 ஆங்கில புத்தாண்டை வரவேற்று பெயிரா தலைவர் ஆ.ஹென்றி வாழ்த்து
உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்களால் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு உதயமாகும் 2026 புத்தாண்டில் அனைவரும், வாழ்வில் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெறவேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாகவும் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களையும் மற்றும் அதன் வரலாற்றையும் குறித்து பெயிரா கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி செய்தி வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில்
“புத்தாண்டு பிறக்கப் போகிறதென்றாலே நம் அனைவரின் மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் குடிகொள்ளும். இந்த இனிய தருணத்தில் பிறக்கவிருக்கும் 2026 ஆம் ஆண்டானது உலகெங்கும் அன்பும், சாந்தியும், சமாதானமும். மகிழ்ச்சியும், செல்வமும், ஆரோக்கியமும் நிறைந்த ஆண்டாகவும், அதேபோன்று பெயிரா கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும், கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர்களின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும், அவர்தம் முன்னேற்றத்திற்கும் ஆகச் சிறந்த ஆண்டாக அமைய வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து இதயபூர்வமாக இந்த புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்போம்.
உலகநாடுகளில் 2026 ஆம் ஆண்டிற்கான ஆங்கில புத்தாண்டானது மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள சிறிய நாடான கிரிபாடி (கிரிபாஸ்) தீவில் 31.12.2025 இந்திய நேரப்படி மாலை 3.30க்கு பிறந்துள்ளது. இதன்மூலம் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.
.புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் மக்கள் புத்தாடை அணிந்து பொது இடங்கள் மற்றும் பொழுதுபோக்கு தலங்களில் திரளாக ஒன்று கூடி மகிழ்வுடன் பட்டாசுகளை வெடித்தும், வான வேடிக்கைகளை நிகழ்த்தியும், ஆடியும் பாடியும், இனிப்புகளை பரிமாறியும், உற்சாக கூக்குரலிட்டு வாகனங்களில் பயணித்து புத்தாண்டை வரவேற்கின்றனர். மேலும் அதிகாலை அவரவர் மத வழக்கப்படி வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று கடவுளை வணங்கி இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக மற்றும் எண்ணிய காரியங்கள் ஈடேற வேண்டி இறைவனை வழிபட்டு புத்தாண்டை தொடங்குகின்றனர்.
மேலும் புத்தாண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சூரியனின் நகர்வினை அடிப்படையாகக் கொண்டு ரோமானியர்கள் உருவாக்கிய காலண்டரின் அடிப்படையில் மார்ச் 1-ம் தேதியே புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. ஜனவரி முதல் தேதியை புத்தாண்டின் முதல் நாளாக பின்பற்றி வருவது சுமார் 500 வருடங்களாகத்தான். ரோமானிய காலண்டரில் மார்ச் மாதத்தை தான் ஆண்டின் முதல் மாதமாகவும், மார்ச் 25-ந் தேதி தான் ஆண்டின் முதல் தேதியாகவும் இருந்தது. காரணம் இயேசுவின் தாய் மரியாள் கர்ப்பமுற்ற தேதி என்பதால் ரோமானியர்கள் இந்த நாளை புத்தாண்டு தினமாக அனுசரித்தனர்.
அதைத் தொடர்ந்து ரோமானிய மன்னரான போம்பிலியஸ் 10 மாதங்கள் உடன் இரண்டு மாதங்களைச் சேர்த்து மொத்தம் 12 மாதங்களாக்கினார். இதில் ஜனஸ் என்னும் ரோமானியக் கடவுளின் நினைவாக ஜனவரியஸ், ஃபெப்ரஸ் கடவுளின் நினைவாக பிப்ரவரியஸ் ஆகிய இரு மாதங்கள் சேர்க்கப்பட்டன. புகழ்பெற்ற மன்னரான ஜூலியஸ் சீசர் என்பவர் ஜூலியன் காலண்டரை உருவாக்கினார். ஜனவரி 1-ந் தேதியை ஆண்டின் முதல் நாளாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். கி .பி. 1582 ஆம் ஆண்டு, போப் 13 ஆம் கிரிகோரி, ஜுலியன் காலண்டரை ரத்து செய்தார். நான்காண்டுகளுக்கு ஒரு ஆண்டு லீப் ஆண்டு என்று கூறி, அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்துக்கு 29 நாட்கள் என்று 365 நாட்களையும், 12 மாதங்களுக்குள் மிகச் சரியாக அடக்கினார். இதனையடுத்து உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டர் முறை நடைமுறைக்கு வந்தது. அதில்தான் ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதே சமயம் இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ம் தேதியையே (கிறிஸ்துமஸ்) புத்தாண்டாகக் கொண்டாட வேண்டுமென இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் டிசம்பர் 25 ஆம் தேதியையே புத்தாண்டாக பின்பற்றினர். இப்படியாக, பல குழப்பங்கள் நிலவி வந்த நிலையில் இறுதியாக உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டரை பின்பற்றி ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொருவரும் நம் வாழ்நாளில் புத்தாண்டு தொடக்கத்தில் நாம் ஏற்கும் உறுதி மொழிகளை செயல்படுத்த முயற்சித்து பாதியில் கைவிட்டிருப்போம். சிலவற்றை உறுதி பூண்டதன் படி நிறைவேற்றி வெற்றி கண்டிருப்போம். எனவே இப்புத்தாண்டில் அனைவரும் எடுத்த உறுதி மொழிகள் அனைத்தையும் நிறைவேற்றி வெற்றி கண்டு வாழ்வில் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெறவேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாக ஆ.ஹென்றி தனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

