2026 தேர்தலில் திமுகவுக்கு எதிரான நடவடிக்கை
![]()
திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும் எம் ஆர் பி செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 2 வது நாளாக செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் டிச 25 : எம் ஆர் பி செவிலியர்களுக்கு திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல் அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல் உடனடியாக எம்ஆர்பி செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2015 முதல் 10 ஆண்டுகளாக ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் வேலை செய்து வருவதாகவும், இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதாகவும், குழந்தைகளை படிக்க வைப்பதில் சிரமம் இருப்பதாகவும், வேலை பளு மற்றும் பணிச்சுமையை பொருட்படுத்தாமல் உழைத்து வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும், இல்லையேல் 2026 தேர்தலில் திமுகவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் எனவும் செவிலியர்கள் எச்சரித்தனர். நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூக தீர்வு காணும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் எனவும் செவிலியர்கள் தெரிவித்தனர்.

