பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம்
![]()
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கே.பி.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் நேரில் ஆய்வு
திருவள்ளூர் நவ 30 : திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிர்வாக இயக்குநருமான கே.பி.கார்த்திகேயன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கூறியதாவது :
தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி மூலம் புயல் எதிர்பார்க்க கூடிய மாவட்டங்களில் எல்லாம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்.அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்த வரையில் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளார்கள். பூண்டி நீர்த்தேக்கத்தில் முன்னெச்சரிக்கையாக 1300 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து 600 கன அடியாக இருக்கிறது. மழையை எதிர்நோக்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 அடி குறைப்பதற்கும் மழையின் வரத்து அளவினை பொறுத்து படிப்படியாக நீர்வரத்தினை தொடர் நிகழ்வாக நடைபெற உள்ளது.
15000 கன அடி முதல் 18000 கன அடி வரை நீர் திறந்தால் கீழ் உள்ள பகுதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தனிக்குழு அமைத்து 24 மணிநேரமும் அங்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது என்றும் இங்கிருந்து தொடர்ச்சியாக அருகில் இருக்ககூடிய சோழவரம், செங்குன்றம், கொசஸ்தலையாறு மற்றும் செம்பரபாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொடர்ச்சியாக 24 மணிநேரமும் தகவல் தொடர்பு ஏற்படுத்துவதற்கும், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுப்பதற்கும் உரிய ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
போதுமான ஏற்பாடுகள் இங்கு செய்யப்பட்டுள்ளது, 24 மணிநேரமும் பொதுப்பணிதுறை நீர்வளத்துறை அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு படைகள் 2 குழுக்கள் ஆவடியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு துறையினர் 9 குழுக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பழவேற்காடு பகுதிகளில் சிறப்பு கவனம் எடுத்து மண்டல அலுவலக தலைமையில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற நீர் இறைக்கும் இயந்திரங்களும், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடற்கரை ஓரமான பகுதிகளில் மின்கம்பங்கள் சேதமடைய வாய்ப்பு உள்ள பகுதிகளிலும் தகுந்த குழுக்களை அமைத்துள்ளனர். தேவையான இடங்களில் நிவாரண முகாம்களும் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
42 மருத்துவக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளது.ஏற்கனவே 323 கர்ப்பிணி பெண்களை அடையாளம் கண்டு 15 நாட்களுக்குள் பிரசவமாக எதிர்பார்க்கக்கூடிய தாய்மார்களுக்கு மழை அதிகமாக வரும் பட்சத்தில் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மீட்பு பணிகளையும் நிவாரண பணிகளையும் செய்ய தயார் நிலையில் உள்ளனர். அதேபோல பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக விழிப்புணர்வும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை செய்யவும் மீட்பு பணிகளும் தொடர்ச்சியாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.
இதில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் கொசஸ்தலையாறு வடிநில கோட்டம் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயகுமார், உதவி இயக்குநர் ஊராட்சிகள் கே.எஸ்.யுவராஜ், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

