சாலையில் சேற்றில் நாற்று நடும் போராட்டம்

Loading

திருவள்ளூர் அடுத்த வதட்டூர் கண்டிகை கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பொதுமக்கள் சாலையில் தேங்கியுள்ள சேற்றில் நாற்று நடும் போராட்டம் :
திருவள்ளூர் நவ 29 : திருவள்ளூர் ஒன்றியம் வதட்டூர் ஊராட்சி கண்டிகை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து பள்ளிக்கு செல்பவர்கள் 2 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று படிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதே போல் வதட்டூர் கண்டிகை கிராமத்திலிருந்து மாநில நெடுஞ்சாலைக்கு பேருந்து வசதி இல்லாததால் நடந்தோ, இரு சக்கர வாகனத்திலோ தான் செல்ல வேண்டும். ஆனால் கடந்த 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலையானது மழை காலத்தில் முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக  உள்ளது.
அதே நேரத்தில் கிராமத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் சுடுகாட்டுக்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாததால் சாலையில் முழங்கால் அளவுக்கு தேங்கியிருக்கும் நீரில் உடலை கொண்டு சென்று புதைக்கும் அவல நிலையும் உள்ளது. இதனால் சுடுகாட்டுக்கு செல்ல கல்வெட்டு பாலம் அமைத்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் கலெக்டர், எம்எல்ஏ., ஆகியோரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.  அதே நேரத்தில் இங்குள்ள கிராம மக்கள் 2 கி.மீட்டர் தூரமுள்ள வதட்டூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.
இதனால் பகுதி நேர நியாய விலைக் கடை அமைக்கவும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  அதே போல் முக்கிய சாலையிலிருந்து கிராமத்திற்கு செல்லும் சாலையும்    சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக இருப்பதால் சாலையில் நாற்றுநடும் போராட்டம் நடத்தியும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் பள்ளிக்கு சென்றுவிட்டு மாணவிகள் வீடு திரும்பும் போது அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் இருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்றும் உடனடியாக சாலை வசதி, சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை ஏற்படுத்துதல், நியாய விலைக் கடை அமைத்தல், பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை  நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.  முதியோர் உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என மூதாட்டியும் வேதனை தெரிவித்தார்.
0Shares