நெற்பயிருக்குகாப்பீடு செய்யநவம்பர்30வரைநீட்டிப்பு
![]()
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிப்பு : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் நவ 24 : தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நடப்பு சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பர் 30 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பருவத்தில் இயல்பான மழை அளவு சுமார் 604 மி.மீ கிடைக்கப்பெறும். தற்பொழுது வரை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் 425 மி.மீ மழைப்பொழிவு பெறப்பட்டு, 244 எக்டர் நெற்பயிர்கள் சேதமுற்றது. மேலும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிக மழைபொழிவு பெற வாய்ப்புள்ளது.
எனவே தொடர் மழை வெள்ளம், பூச்சி நோய் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பினை ஈடுசெய்ய விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு சம்பா பருவத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.545 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ / தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, இ-சேவை மையங்களிலோ நேரிடையாக, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு கட்டணம் செலுத்தி காப்பீடு செய்துகொள்ளலாம்.
இத்திட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் பெற்ற விவசாயிகளுக்கு சம்மந்தப்பட்ட வங்கிகளின் மூலம் பயிர் கடன் தொகையில் இருந்து காப்பீட்டு கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது. பயிர் காப்பீடு செய்ய விருப்பமின்மை படிவம் கொடுத்த பயிர் கடன் பெற்ற விவசாயிகள் இத்திட்டத்தில் பங்கு பெற இயலாது. எனினும் விருப்பமின்மை படிவம் ஏற்கனவே கொடுத்திருந்து, தற்பொழுது பயிர் காப்பீட்டில் பங்குபெற விரும்பினால் அவர்கள் சம்பந்தப்பட்ட வங்கி / தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நெற்பயிருக்கு காப்பீடு செய்து பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

