திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு..விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் பிரதாப் அழைப்பு!

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் திருக்குறள் முற்ரதாறோதல் பாராட்டுப் பரிசு பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.

இலக்கியங்கள் அனைத்திலும் சிறந்ததும் உன்னதமானதும் மனித குலம் அனைத்திற்குமான தன்னிகரற்ற படைப்பு திருக்குறள். அத்தகைய சிறப்புமிக்க அறக்கருத்துக்களடங்கிய திருக்குறட்பாக்களை மாணவர்கள் இளம் வயதிலேயே மனப்பாடம் செய்தால் அவை பசுமரத்தாணி போல் பதிந்து, நெஞ்சில் நிலைத்து அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும்.

தாம் பெறுகின்ற கல்வியறிவு, நல்லொழுக்கம் மிக்க மாணவர்கள் உருவாக வழிவகுக்கும். எனவே, திருக்குறள் முற்றோதல் செய்யும் மாணவச் செல்வங்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுவது, மாணவர்களின் நல்வாழ்வுக்குத் துணை நிற்பதாக அமையும். அதனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு தலா ரூ.15,000 வீதம் பரிசுத்தொகை,பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுக்கு கலந்து கொள்ளும் மாணவர்கள், திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதி பெற்றவர்கள் தெரிவு செய்யப்பட்டு, பரிசு பெறுவதற்கு அரசுக்குப் பரிந்துரை செய்யப்படுகிறார்கள். திறனாய்வு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துறையினரால் நடத்தப்பெறும்.

திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு பெற 1330 திருக்குறட்பாக்களையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும்.இயல் எண், பெயர், அதிகாரம் எண், பெயர், குறள் எண், பெயர் போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளைக் கூறும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும்.திருக்குறளின் அடைமொழிகள், திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள், திருக்குறளின் சிறப்புகள் ஆகியவற்றை அறிந்தவராக இருத்தல் வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் பயில்பவராக இருத்தல் வேண்டும். அரசு,அரசு உதவிபெறும், தனியார்/ நடுவண் அரசு போன்ற பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கு பெறலாம்.தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெறும் இப்பரிசை இதற்கு முன்னர் பெற்றவராக இருத்தல் கூடாது.திருக்குறளின் பொருளும் அறிந்திருப்பின் கூடுதல் தகுதியாகக் கருதப்பெறும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

0Shares