மோதலில் ஈடுபட்ட மக்னா காட்டு யானை…சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !

Loading

தமிழக – கேரளா எல்லையில் உடலில் காயங்களுடன் சுற்றித் திரிந்த மக்னா காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !!!

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான ஆனைகட்டி தமிழக – கேரளா எல்லையில் அமைந்து உள்ளது. இதன் காரணமாக கேரளா வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்குள் யானைகள் இடப்பெயர்ச்சி நாள்தோறும் காணப்படும், இந்த நிலையில் யானைகள் பவானி ஆற்றுப்பகுதி வழியாகவும், வனப்பகுதி வழியாகவும் தமிழக எல்லைக்குள் நுழைவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக உடலில் காயங்களுடன் மக்னா யானை ஒன்று கேரளா வனப்பகுதியில் இருந்து வெளியேறி தமிழக வனப்பகுதியான கூடப்பட்டி என்ற மலைவாழ் கிராமத்திற்கு அருகே வந்து உள்ளது. இதனை பார்த்த பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினர் அந்த யானைக்கு பழங்கள் மூலம் மருந்துகள் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.

ஆனால் அந்த யானை தமிழக வனப் பகுதிக்கும் கேரள வனப்பகுதிக்கும் மாறி, மாறி சென்று வருவதால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் தொடர்ந்தது. இந்நிலையில் அந்த மக்னா யானை பவானி ஆற்றின் மையப் பகுதியில் நின்று கொண்டு இருந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தமிழக வனத்துறை மற்றும் கேரளா வனத்துறைக்கும் தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த இரு மாநில வனத் துறையினரும் அந்த யானையை கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இது குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில் கடந்த ஒரு வார காலமாக இந்த யானை அந்தப் பகுதியில் சுற்றி வந்ததாகவும், இரு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்த யானை காயம் பட்டது தெரியவந்து உள்ளதாக தெரிவித்தார். இந்த யானைக்கு வாழை, பலா, பழங்களில் மருந்துகள் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மேலும் சிகிச்சை அளிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்த நிலையில் சில நாட்கள் கேரளா வன பகுதிக்குள் சென்று விட்டது. பின்னர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இரு மாநில எல்லையில் இந்த யானை நின்று கொண்டு இருந்ததாகவும், இதற்கு பழங்கள் மூலமாக மருந்துகள் வைத்து கொடுக்கப்பட்டு வந்ததாக தெரிவித்தார்.

வனக் கால்நடை மருத்துவர் வெண்ணிலா தலைமையில் மருத்துவ குழுவினர் யானையை கண்காணித்து வந்தனர். இது தவிர பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்தை சேர்ந்த பத்துக்கு மேற்பட்ட வனப் பணியாளர்கள் யானையை கண்காணித்து வந்தனர். உடலில் உள்ள காயங்களுக்கு மருந்து தெளித்தும் வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

 

0Shares