3 வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
பெங்களூருவில் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி
தொடங்கி வைத்தார். விழாவில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெங்களூருவில் சல்லகட்டா முதல் ஒயிட்பீல்டு வரை ஊதா நிறப்பாதையிலும், சில்க் நிறுவனத்தில் இருந்து மாதவரா வரை பசுமை நிறப்பாதையிலும் 76 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. பசுமை நிறப்பாதையில் உள்ள ஆர்.வி.ரோடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பொம்மசந்திரா வரை 19.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.இந்த பணிகள் நிறைவடைந்து இதன் தொடக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த விழாவுக்கு தனி விமானம் மூலம் இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி பெங்களூரு வந்தடைந்த நிலையில், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின்னர், நேராக பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு வந்த அவர், 3 வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.
பெங்களூரு- பெலகாவி, அமிர்தசரஸ் – ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, நாக்பூர் – புனே ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரெயில்கள் சேவையை அர்ப்பணித்தார்.இதேபோல் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையையும் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன்பின்னர், ரெயிலின் உள்ளே சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார். ரெயிலில் அமர்ந்திருந்த மாணவ மாணவிகளுடன் சிறிது நேரம் உரையாடினார்.
அதன் பிறகு அவர் ஜே.பி.நகர் 4-வது பிளாக்கில் இருந்து கடபுகெரே வரையிலான 3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு பிரதமர் மோடி பிற்பகல் 3 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.