தங்க நகைக்கு பதிலாக செம்பு கட்டி கொடுத்து ரூ 1 கோடி மோசடி!
புதுச்சேரியில் தங்க நகைக்கு பதிலாக செம்பு கட்டி கொடுத்து ரூ 1 கோடி மோசடி செய்த நபரை போலிஸார் தேடி வருகின்றனர்.இந்த மோசடி சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை பாரதி வீதியைச் சேர்ந்தவர் தீபக் தாஸ் (வயது 50.) தங்க நகைகள் செய்யும் பத்தர். இவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலத்தைச் சேர்ந்தவர் என கூறி சந்திப் ஜனா என்பவர் அறிமுகமானார். நகை வியாபாரி என கூறிய அவர் தங்க கட்டிகளை கொடுத்து நகை செய்து பெற்று சென்றார்.
2 முறை வியாபாரத்தை சரியாக செய்ததால் தீபக் தாசுக்கு அவரிடம் நம்பிக்கை ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 40 கிராமில் 20 செயின்கள் தனக்கு வேண்டும் என்று போனில் கூறியுள்ளார்.
தொடர்ந்து அந்த செயின்களுக்கு பதிலாக சேதாரம், கூலி சேர்த்து 1.8 கிலோ தங்க கட்டியை தந்துள்ளார். வழக்கமாக வியாபாரம் செய்யும் நபர் என்பதால் தங்க கட்டியை பரிசோதிக்காமல் தீபக் தாஸ் பெற்று கொண்டார்.
பின்னர் அதனை சோதித்து பார்த்த போது அது செம்பு கட்டி என தெரிந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தீபக் தாஸ் பெரிய்கடை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..இந்த மோசடி சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.