திராவிட இயக்கச் செம்மல் திரு.பனகல் அரசர் அவர்கள் பிறந்ததினம்!.
மருத்துவக் கல்லூரியில் பயில சமஸ்கிருதம் தெரிய வேண்டும் என்கிற முறையை ரத்து செய்த திராவிட இயக்கச் செம்மல் திரு.பனகல் அரசர் அவர்கள் பிறந்ததினம்!.
பனங்கன்டி ராமராயநிங்கார் என்னும் இயற்பெயர் கொண்ட பனகல் அரசர் (ஜூலை 9, 1866 – டிசம்பர் 16, 1928) நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், சென்னை மாகாணத்தின் இரண்டாவது பிரதமர் (முதலமைச்சர்) ஆவார்.
மருத்துவம் பயில சம்ஸ்கிருதம் கற்றிருக்கத் தேவையில்லை’ என்று அரசு ஆணை பிறப்பித்தார். இதனால், மருத்துவப்படிப்பில் செல்வாக்கு செலுத்திக்கொண்டிருந்த மேட்டுக்குடி வர்க்கத்தினர் இதைக் கடுமையாக எதிர்த்தனர். எதிர்ப்பு எதனையும் சிறிதும் பொருட்படுத்தவில்லை பனகல் அரசர். சம்ஸ்கிருதம் அறிந்தவர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பு சாத்தியம் என்றிருந்த நிலையில் அனைத்து வர்க்கத்தினரும் மருத்துவராகும் வாய்ப்பை உருவாக்கினார்.
பனகல் அரசரின் மற்றொரு மைல்கல் சாதனை அரசர்கள் கட்டி பரிபாலனம் செய்து வந்த கோயில் சொத்துக்களை ஒருசில குடும்பங்களைச் சேர்ந்தவர்களே பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வந்தனர். அதைத் தடுக்கும் வகையில் கோயில்களுக்கென தனித் துறையை உருவாக்கி, இந்து ஆலயங்களின் நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக இந்து அறநிலையச் சட்டத்தை இயற்றினார்.
இவரது மூன்றாவது அதிரடி அரசுப் பணிகளில் வகுப்புவாரி இடஒதுக்கீட்டிற்கான ஆணையைப் பிறப்பித்து அதை நடைமுறைப்படுத்தினார். நகர விரிவாக்கத்துக்காகத் தியாகராய நகரை உருவாக்கியவரும் இவர்தான். ஆங்கிலேய ஆளுநர்கள் பெரும்பாலான அதிகாரங்களைத் தங்கள் வசம் வைத்திருந்த காலத்திலேயே இத்தனை சாதிக்க முடிந்த பனகல் அரசரை நினைவு கூறவே தியாகராய நகரில் பனகல் பூங்காவும் சைதாப்பேட்டையில் பனகல் மாளிகை அரசு பல்லடுக்கு அலுவலகமும் அவரது பெயரைத் தாங்கி நிற்கின்றன.