திருவள்ளூரில் புதிய மல்யுத்தம் மையம்.. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திருவள்ளூர் விளையாட்டு அரங்கில் மல்யுத்தம் மையத்தை தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர் சா.மு.நாசர்,மாவட்ட ஆட்சியர் பிரதாப் பங்கேற்றனர்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சென்னை, நேரு விளையாட்டு அரங்கம், SDAT அலுவலகம் அருகில், சென்னை ஒலிம்பிக் அகாடமியில் இருந்து திருவள்ளூர் விளையாட்டு அரங்கில் மல்யுத்தம் மையத்தை தொடங்கி வைத்தார்.அப்போது நிகழ்வில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் பிரதாப், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி. இராஜேந்திரன் (திருவள்ளூர்), எஸ்.சந்திரன் (திருத்தணி) ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
அப்பொழுது அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்ததாவது :திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் துணை முதலமைச்சர் தலைமையில் காணொலி காட்சி மூலம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் “SDAT – ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம் மல்யுத்தம் விளையாட்டினை துவக்கி வைத்தார்.மேலும், தமிழ்நாட்டின் விளையாட்டில் முதன்மையான மாநிலமாக உருவாக்குவதுடன் தனிநபர்களுக்கு விளையாட்டுகளை முழுத்திறனுடன் அணுகவும், அவர்கள் உயர்மட்ட போட்டிகளில் பங்குபெற்று சிறப்படையவும் வாய்ப்புகளை வழங்குகிறது.
துணை முதலமைச்சர் மான்ய கோரிக்கையின் போது, தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் பிரபலமாக வீரர்கள்,வீராங்கனைகள் பல்வேறு உயரிய நிலையிலான விளையாட்டுப் போட்டிகளில் மகத்தான வெற்றிகளை பதிவு செய்ய இயலும் என்பதனை கருத்தில் கொண்டு, தகுதியான பயிற்றுநர்களை மாவட்டந்தோறும் குறிப்பிட்ட விளையாட்டுக்களில் நியமனம் செய்து வீரர்கள்/வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் உயரிய தரத்திலான விளையாட்டு திறன் மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் STAR (SPORTS TALENT & RECOGNITION) அகாடமி உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும், இப்பயிற்சி மையத்தில் 20 விளையாட்டு வீரர்கள், 20 வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு ஒரு மாதத்தில் 25 நாட்கள் தொடர் பயிற்சி வழங்குவதோடு, சிற்றுண்டி, பயிற்சி உபகரணங்கள் மற்றும் விளையாட்டுச் சீருடை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இம்மையத்தின் மல்யுத்தம் பயிற்றுநர்களுக்கான நேர்முகத் தேர்வு 23.04.2025 அன்று நடைப்பெற்றதில் சிறந்த பயிற்றுநராக க.சதிஷ் கண்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேற்கண்ட பயிற்றுநர்கான மாதாந்திர சம்பளம் ரூ.25000 வழங்கப்படும் என அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.