கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி துவங்கியது!

Loading

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நேரு பூங்காவில் தோட்டகலை மற்றும் மலைப்பயிர்கள் துறை நடைபெற்ற 13 வது காய்கறி காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நேரு பூங்காவில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் நடைபெற்ற 13வது காய்கறி காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்து, பார்வையிட்டார்.

பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் கோடை விழா தொடங்கப்பட்டு, காய்கறி காட்சி, வாசனை திரவிய காட்சி, ரோஜா காட்சி, மலர்க்காட்சி, பழக்காட்சி ஆகிய காட்சிகள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இம்மலர்க்கண்காட்சியினை காண உலகம் முழுவதிலும் இருந்து பல இலட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை புரிகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை உற்சாகப்படுத்தவும் அவர்களை ஈர்க்கவும் தோட்டக்கலைத்துறையின் மூலம் மே மாதத்தில் கோடை காட்சிகளான காய்கறி காட்சி, வாசனை திரவியக்காட்சி, ரோஜா காட்சி, மலர்க்காட்சி, பழக்காட்சி மற்றும் காட்டேரி பூங்காவில் முதல் முறையாக மலைப்பயிர்கள் காட்சி போன்று பல்வேறு விதமான காட்சிகள் நடைபெறுகிறது.

கோடை விழாவின் முதல் நிகழ்வாக துவக்கி வைக்கப்பட்டுள்ள காய்கறி காட்சியில் குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அனைவரையும் கவரும் வகையில் 2.5 டன் காய்கறிகளால் ஆனா பரம்பரியமான ஜல்லிகட்டு காளை உருவமைப்பானது கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, முள்ளங்கி மற்றும் கேரட் ஆகிய காய்கறிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும், உருளைக்கிழங்கினால் ஆன சிலம்பாட்டம், காரட் மற்றும் பீட்ரூட் ஆகிய காய்கறிகளால் ஆன தமிழ் மறவன் பட்டாம்பூச்சி, கத்தரிக்காய், கோவக்காய் மற்றும் பஜ்ஜி மிளகாய் ஆகிய காய்கறிகளால் வடிவமைக்கப்பட்ட மரகத புறா, பச்சை மிளகாய், சிகப்பு மிளகாயினால் வடிவமைக்கப்பட்ட பச்சைக்கிளி மற்றும் சுக்கினி, கோவக்காய், பச்சை, சிவப்பு மிளகாய், முள்ளங்கி, காரட் ஆகிய காய்கறிகளால் ஆன தஞ்சாவூர் பொம்மை போன்ற சிறிய உருவங்கள் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கோவை, காஞ்சிபுரம், விழுப்புரம், ஈரோடு, தேனீ, திருவண்ணாமலை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் தோட்டக்கலைத் துறையினரால் அவர்தம் மாவட்டங்களின் சிறப்பினை பறைச்சாற்றும் வகையில் திடல்கள் காய்கறிகளால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காய்கறி காட்சியானது இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதனை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கண்டு ரசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், மாவட்டத்திற்கு வருகைத் தரும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெற்று வர வேண்டும் எனவும், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர வேண்டாம் எனவும், மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நெகிழி ஒழிப்பு தொடர்பான பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இவ்விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா அவர்கள், குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, தோட்டக்கலை துணை இயக்குநர்கள் அப்ரோஸ் பேகம், வினீதா, மாவட்ட சுற்றுலா அலுவலர் துர்காதேவி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள் பைசல் (உதகை ரோஜா பூங்கா), பெவிதா (உதகை தாவரவியல் பூங்கா), விஜியலட்சுமி (குன்னூர் சிம் பூங்கா), ஐஸ்வர்யா (கோத்தகிரி நேரு பூங்கா), ஜெயலட்சுமி (கூடலூர்), கோத்தகிரி வட்டாட்சியர் ராஜேஸ்வரி, தலைவர் ஜெயகுமாரி துணைத்தலைவர் உமாநாத் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

0Shares