ஜிப்மர் டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை- அடுத்தடுத்து பெற்றோர் இறந்ததால் விரக்தி!

Loading

புதுச்சேரி லாஸ்பேட்டை எழில் நகர் தனியார் குடியிருப்பில் வசித்து வந்தவர் டாக்டர் ஆதி நாராயணன் (51).

இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் மயக்கவியல் பிரிவில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். திருமணம் ஆகாதவர். அவரது பெற்றோர் இருவரும் வயது முதிர்ச்சி காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து இறந்து போனார்கள். இதனால் டாக்டர் ஆதிநாராயணன் தனிமையில் வசித்து வந்தார். அவரது உறவினர்கள், பெங்களூருவில் வசிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஆதிநாராயணன் பணிக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜிப்மர் நிர்வாகம் ஆதிநாராயணன் வசித்து வந்த குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிக்கு தகவல் தெரிவித்து அவரது வீட்டுக்கு சென்று பார்க்கும் படி கேட்டுக்கொண்டனர்.

அதன்பேரில் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகி கோவிந்தராஜுலு, டாக்டர் ஆதிநாராயணன் வீட்டுக்கு அக்கம் பக்கத்தினருடன் சென்று பார்த்தார். அப்போது வீடு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து, லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் டாக்டர் ஆதிநாராயணன் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அவரது உடல் அருகில் சில ஊசிகளும், குளுக்கோஸ் ட்ரிப்ஸ் ஏற்றும் உபகரணங்கள் கிடந்தன. இடது கையில் ட்ரிப்ஸ் ஏற்றியபடி இருந்தது.

பெற்றோர் அடுத்தடுத்து இறந்து போனதால் தனிமையில் வசித்து வந்த டாக்டர் ஆதிநாராயணன் விரக்தியில் விஷ ஊசிபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0Shares