உன்னங்குளம் அருள்மிகு பத்திரகாளி பராசக்தி கோவில் பங்குனி திருவிழா..வருகின்ற 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்!
கன்னியாகுமரி மாவட்டம் சரல் அருகே உன்னங்குளம் அருள்மிகு பத்திரகாளி பராசக்தி கோவிலில் வருடாந்திர திருவிழா வருகின்ற 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டம் சரல் அருகே உன்னங்குளம் என்னும் ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு பத்திரகாளி பராசக்தி கோவில்.கேட்டவர்களுக்கு கேட்டவரம் அளிக்கும் பத்திரகாளி பராசக்தி அம்மனுக்கு பங்குனி மாதம் வருடாந்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி மாச திருவிழா இந்த திருக்கோவிலில் வருகின்ற 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.
இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் காலை, மதியம் ,மாலை என மூன்று நேரங்களிலும் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. அதேபோல் திருவிழா நாட்களில் சிறப்பு அன்னதானமும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து எட்டாம் திருவிழா அன்று மேளதாளம் முழங்க புனித நீர் எடுத்து வருதல் நிகழ்ச்சியும்,இரவு திரு வீதி உலா எழுந்தருளி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.முன்னதாக நாதஸ்வரகச்சேரி,வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெறும்.
ஒன்பதாம் திருநாள் அன்று சிறுவர்களுக்கான அலகு குத்துதல், சிறுமியர்களுக்கான மாவிளக்கு ஏந்துதல் போன்ற நிகழ்ச்சி நடைபெறும்.அப்போது நோன்பு இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர். அதன் பின்னர் மகா சிறப்பு தீபாதனையும் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும்.
திருவிழா நாட்களில் மாணவ ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ,கரகாட்டம் ,ஒயிலாட்டம், மயில் குதிரை ஆட்டம் மற்றும் நகைச்சுவை பட்டிமன்றம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.திருவிழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துவருகின்றனர்.