என்னைத் தாண்டி இந்தியை திணியுங்கள் பார்க்கலாம்.. சீமான் ஆவேசம்!
ராணிப்பேட்டை
என்னைத் தாண்டி இந்தியை திணியுங்கள் பார்க்கலாம் என ஆவேசமாக சீமான் பேசினார்.
நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் ராணிப்பேட்டை அடுத்த திமிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தற்போது தனியார் பள்ளிகளில் தமிழை எடுத்து விட்டார்கள் என்றும் அங்கு இந்தி கற்பிக்கப்படுகிறது என்றும் இதனால் அந்த பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்கின்றனர் என்றும் தமிழ் படித்தால் பிச்சை தான் எடுக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி எங்களை வீழ்த்த நினைக்கிறார்கள் என கூறினார்.
மேலும் ஏற்கனவே தமிழகத்தில் மும்மொழி கொள்கை வந்துவிட்டது என்றும் அதனை வெவ்வேறு வழிகளில் செயல்படுத்தி வருகிறார்கள் என்றும் அதனை எதிர்ப்பதில் அரசுக்கு உறுதி கிடையாது என்றும் என்னைத் தாண்டி இந்தியை திணியுங்கள் பார்க்கலாம் என ஆவேசமாக சீமான் பேசினார்.
மேலும் மக்களின் வாழ்க்கையை பறிப்பதற்காக முதல்வர் மருந்தகம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் தேர்தல் வரும்போதுதான் அது தேவைப்படுகிறதா ஏன் இதுவரை மக்களுக்கு நோய் வரவே இல்லையா என பேசிய சீமான் கொள்கை மீது விருப்பம் உள்ளவர்கள் எனது கட்சியில் பயணிப்பார்கள் என்றும் முரண்பாடு உள்ளவர்கள் மாறி செல்கின்றனர் என்றும் செல்வது அவர்கள் சொந்த விருப்பம் என கூறினார்.
மேலும் எந்த இலையும் உதிரும்போது அமைதியாக விழாது என்றும் வெளியே போகிறவர்கள் நான் நன்றாக செயல்படுகிறேன் என்று சொல்லி விட்டுப் போக மாட்டார்கள் என்றும் யார் கையிலும் காலிலும் விழுந்து தக்க வைக்க வேண்டிய அவசியம் நாம் தமிழர் கட்சிக்கு இல்லை என பேசினார்.
தமிழகத்தில் பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது குறித்து அப்பா (முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்) தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் இன்றைய முதல்வர் ஒரு பிராண்டாக பார்க்கப்படுகிறார் என்றும் அரசுக்காக அவர் திராவிட மாடல் என்ற பெயரில் ஆட்சிக்காக நடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என சீமான் கூறினார்.
மேலும் 2026 தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது என்றும் அதற்குள் அவசரப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் எங்களுக்கு கூட்டணி அவசியம் இல்லை என்றும் எல்லாத்தையும் சொல்ல முடியாது கொஞ்சம் ரகசியம் வையுங்கள் என்றும் மொழி குறித்த புரிதல் பா.ஜ.க.விற்கு கிடையாது.
புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் கல்வித்துறைக்கு நிதி வழங்கப்படவில்லை என்பது சரியல்ல. நிதியைக் கூட கேட்டு பெற முடியாமல் 40 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு என்ன செய்கிறீர்கள் என்றும் அரசு ஊழியர்கள் நாள்தோறும் ஒவ்வொரு கோரிக்கைகளை முன்வைத்து போராடும் சூழல் உள்ளது என்றும் அவர்கள் அரசு அழைத்து பேசினாலும் தங்களது போராட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.