தமிழ்நாடு முதலமைச்சருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி நன்றி பாராட்டி கடிதம்

Loading

தமிழ்நாடு முதலமைச்சருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி நன்றி பாராட்டி கடிதம்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட மற்றும் கையகப்படுத்த திட்டமிட்ட நிலங்களை விடுவித்து தீர்வு ஏற்படுத்தியமைக்கு, தமிழ்நாடு முதலமைச்சருக்கும், வீட்டுவசதி துறைக்கும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், மனம் திறந்த பாராட்டுக்களையும், நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பொதுவாக பொது மக்களின் வீட்டுவசதி தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தோடு கடந்த 1961 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு, சென்னை மற்றும் பிற நகரங்களில் நில எடுப்பு சட்டத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தி வீட்டுவசதித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அவ்வாறு கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மற்றும் கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்ட நிலங்களுக்கு, நீண்ட காலமாக தீர்வு செய்து தரக் கோரி, எமது அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பும், பாதிக்கப்பட்ட பொது மக்களும் வீட்டுவசதி வாரியத்திடம் தொடர்ந்து தடையின்மை சான்று கோரியும், நில எடுப்பிலிருந்து விலக்களிக்கக் கோரியும் மற்றும் நிலம் மறுமாற்றளிப்பு கோரியும் கோரிக்கை வைத்து வந்தோம்.

இந்நிலையில் எங்களின் கோரிக்கையின் அடிப்படையில் முதல்வரின் முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலகங்களில் சிறப்பு புகார் பெட்டிகளை அமைத்து நில எடுப்பு தொடர்பாக பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் இருந்து 4488  மனுக்களை பெற்றது,

இம்மனுக்களுக்கு தீர்வு காணும் விதமாக, தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் சார்பில் கடந்த 10.10.2023 அன்று அரசாணை எண்.136/2023 இன் மூலம் நில நிர்வாக ஆணையர் தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்து தீர்வுகாண ஆணையிட்டது.

இக்குழு பாதிக்கப்பட்ட பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை வகைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு அவற்றினை, 4 (1) அறிவிக்கை இரத்து செய்யப்பட்ட இனங்கள், பிரிவு 6 இன் கீழான வரைவு விளம்பல் இரத்து செய்யப்பட்ட இனங்கள், தீர்மானம்  பிறப்பிக்கப்பட்டு வாரியம் வசம் ஒப்படைப்பு செய்யப்படாத நிலங்கள், சுவாதீனம் பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படாத இனங்கள், திட்டம் செயல்படுத்தப்பட்ட இனங்கள் என்ற 5 இனங்களாக வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வகைப்படுத்தி அதற்கு தீர்வு காணும் வகையில்,

முதற்கட்டமாக மேற்கண்ட முதல் 2 வகைபாடுகளில் அமைந்துள்ள நிலங்கள் சம்பந்தமாக, பொதுமக்களால் அரசுக்கு கொடுக்கப்பட்ட மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு, அதன் அடிப்படையில் முதற் கட்டமாக திருநெல்வேலி, கன்னியாகுமாரி, தூத்துக்குடி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, வேலூர், இராணிபேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருச்சி, அரியலூர், கரூர், தஞ்சாவூர், மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூர், திருவள்ளுர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள  2002.21 ஏக்கர் நிலங்களை,

எமது அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் பொது மக்களின் கோரிக்கைகளுக்கேற்ப, மேற்கண்ட முதல் இரு வகைபாடு உள்ள நிலங்களை வீட்டுவசதி வாரியத்தில் இருந்து விடுவித்து விலக்களிக்க சிறப்புக் குழு அரசிற்கு பரிந்துரை செய்ததின் அடிப்படையில்.

தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் சார்பில் அரசாணை எண்கள் 179//24 &180/24 தேதி 04.10.2024 அன்று  வெளியிட்டு வீட்டுவசதி வாரியம் கையகப்படுத்திய மற்றும் திட்டமிட்ட நிலங்களை, நில எடுப்பிலிருந்து விலக்களித்து ஆணையிட்டுள்ளது.

ஒருவேளை தாங்கள் மேற்கண்ட வகையில் வரிசையாக வகைப்படுத்தி உள்ள இனங்களில் இனம் நான்கு மற்றும் ஐந்து ஆகியவற்றில் சிறிய அளவில் நிலங்களை வைத்திருக்கும் பொதுமக்கள் வாரியத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு குறைந்தபட்ச கட்டணத்தை விதிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைக்கின்றோம்.

மேலும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்து, பொதுமக்கள் தினம் தினம் சந்தித்து வந்த பெரும் பிரச்சனையை தாய் உள்ளத்தோடு தங்களின் சீரிய தலைமையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசும்,குறிப்பாக தங்களின்  ஆலோசனையை பெற்று, தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையும் மக்களுக்கான மகத்தான திட்டத்தையும், ஆகச் சிறந்த அரும்பெரும் திட்டத்தையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. மேற்கண்ட திட்டம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது என்றும்.

வீட்டுவசதி வாரிய நில எடுப்பு பிரச்சனைக்கு விலக்களித்து தீர்வினை ஏற்படுத்தியமைக்கு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பிலும், பாதிக்கப்பட்ட பொதுமக்களின் சார்பிலும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

0Shares