திண்டுக்கல்: உணவு ஒவ்வாமையால் 40 பேருக்கு வாந்தி மயக்கம்
திண்டுக்கல் அருகே கோவில் திருவிழாவில் வழங்கப்பட்ட நீராகரங்கள் மற்றும் தின்பண்டங்களை அருந்தியதால் வாந்தி மயக்கத்துடன் 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களிடம் அதிமுக கூட்டணி கட்சியான எஸ் டி பி ஐ திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் முகமது முபாரக் மற்றும் அதிமுக மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆர்.வி.என் கண்ணன் உள்ளிட்டோர் நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே அகரம் கிராமத்தில் நேற்று முத்தாலம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு நீர் மோர், பானகம் உள்ளிட்ட நீர் ஆகாரங்கள், வெள்ளரிக்காய் மாங்காய் கலந்த தின்பண்டங்களையும் பொதுமக்களுக்கு அங்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய கிராமவாசிகள் பலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அருகிலுள்ள தாடிக்கொம்பு அரசு மருத்துவமனையில் வாந்தி மயக்கத்துடன் சிகிச்சைக்காக வந்த நிலையில், அங்கிருந்து சுமார் 40க்கும் மேற்பட்டோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை அதிமுகவின்கூட்டணி கட்சியான எஸ் டி பி ஐ கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக் மற்றும் அதிமுக மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆர் வி ன் கண்ணன், அகரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சக்திவேல், தாடிக்கொம்பு ஒன்றிய தலைவர் முத்தையா உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர்.