சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றுவோருக்கு ரூ.10 ஆயிரம் வெகுமதி

Loading

சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றுவோருக்கு ரூ.10 ஆயிரம் வெகுமதி; அரசாணை வெளியீடு

சென்னை, ஜூலை 17-
சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்றுவோருக்கு மத்திய அரசின் ஊக்கத் தொகையுடன் மாநில அரசு சார்பிலும் ரூ.5 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.10 ஆயிரம் வெகுமதி வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலர் பி.அமுதா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் இயக்கூர்திகள் சட்டங்கள்- நிர்வாகம் மானிய கோரிக்கையில், “சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்கெனவே மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த ரூ.5 ஆயிரம் தொகையுடன், மாநில அரசின் பங்களிப்பாக சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து கூடுதலாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்” என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவித்தார்.
இதனைப் பெறுவதற்கு சாலை விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக (கோல்டன் ஹவர்) மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, உயிரை காப்பாற்றியிருக்க வேண்டும். அவர்கள் குறித்த விவரங்களை காவல் நிலையம் அல்லது மருத்துவமனையிடம் பெற்று மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்வர். அதில், வெகுமதி பெற தகுதியானவர்கள் குறித்த பரிந்துரையை மாதந்தோறும் போக்குவரத்து ஆணையரகத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பி வைக்கும்.
இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களின் வங்கிக் கணக்கில் ஆணையரகம் வாயிலாக ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்படும். தங்களது அடையாளத்தை வெளிக்காட்டி கொள்ள விரும்பாதவர்களுக்கு வெகுமதி வழங்கப்படாது. வெகுமதியைப் பெறுவதற்கு சில வழிகாட்டுதல்களையும் போக்குவரத்து ஆணையர் வழங்கியுள்ளார். அதன்படி,
* உயிர்களை காப்பாற்றுவோருக்கு விபத்து எண்ணிக்கைக்கு ஏற்ப தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
* ஒரே விபத்தில் பல உயிர்களை ஒருவர் காப்பாற்றியிருந்தால் அவருக்கு ரூ.5 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும்.
* ஒருவரின் உயிரை பலர் காப்பாற்றியிருந்தால் ரூ.5 ஆயிரம் பகிர்ந்தளிக்கப்படும்.
* ஒரே விபத்தில் பலரின் உயிரை பலர் காப்பாற்றியிருந்தால் அவர்கள் அனைவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். ரொக்கப் பரிசுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
இவ்வாறு வெகுமதி வழங்குவதற்கு தக்க உத்தரவு பிறப்பிக்குமாறு போக்குவரத்து ஆணையர் கோரியிருந்தார்.
இதை கவனமாக பரிசீலித்த அரசு, ஆணையரின் பரிந்துரையை ஏற்று சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றுவோருக்கு மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் தொகையுடன் மாநில சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து ரூ.5 ஆயிரம் வழங்க போக்குவரத்து ஆணையருக்கு அனுமதி அளிக்கிறது. இத்திட்டம் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *