நிர்வாகிகள் கட்சி மாறியதால் சலசலப்பு: அ.தி.மு.க.- பா.ஜனதா திடீர் மோதல்

Loading

நிர்வாகிகள் கட்சி மாறியதால் சலசலப்பு:அ.தி.மு.க.- பா.ஜனதா திடீர் மோதல்
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது அரசியல் களத்தில் அதிரடியாக பல்வேறு முடிவுகளை எடுத்தார். குறிப்பாக தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய 2 கட்சிகளுமே தேவையில்லை என்கிற முடிவில் அவர் இருந்தார். இதன்படி 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசிய நேரத்தில் தமிழகத்தில் ஜெயலலிதா மேற்கொண்ட பிரசாரம் அவருக்கு பெருமளவில் கை கொடுத்தது. அந்த மோடியா? இந்த லேடியா? என்கிற பிரசாரத்தில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு 37 இடங்களில் வென்றது.ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் பாரதிய ஜனதா கட்சி கைகோர்த்து செயல்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி படுதோல்வியை சந்தித்த நிலையில் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடர்ந்தது. இந்த கூட்டணியால் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனாலும் அ.தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. பா.ஜனதா கட்சிக்கு 4 இடங்கள் கிடைத்தன. அ.தி.மு.க. பல தொகுதிகளில் குறைந்த அளவிலான ஓட்டு வித்தியாசத்திலேயே தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளிடம் தோற்றுப்போய் இருந்தது. இதுதொடர்பாக அப்போது கருத்து தெரிவித்த அரசியல் நிபுணர்கள் அ.தி.மு.க.வின் இந்த தோல்விக்கு பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்ததே முக்கிய காரணம் என்று விமர்சித்து இருந்தனர். இதன் பின்னர் அ.தி.மு.க. மீது தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி சொல்வதைத்தான் அ.தி.மு.க. கேட்கிறது என்கிற பேச்சுக்கள் அக்கட்சிக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டு வருகிறது.அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி தலையிட்டு பல்வேறு பஞ்சாயத்துக்களை செய்துள்ளதாகவும் பேசப்பட்டது. இப்படி அ.தி.மு.க. மீது பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதாகவே மற்ற கட்சிகள் குற்றம் சுமத்தி வந்துள்ளன. இதுவும் அ.தி.மு.க.வின் தனித்தன்மையை பாதிப்பதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் நிர்மல்குமார் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்ட விவகாரம் பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணியில் திடீர் சலசலப்பையும், மோதலையும் ஏற்படுத்தி உள்ளது.இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பா.ஜனதாவினரை இழுத்தே கட்சியை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் திராவிட கட்சிகள் இருப்பதாக ஆவேசமாக குற்றம் சாட்டினார். எந்த வினைக்கும் ஒரு எதிர்வினை என்பது நிச்சயம் உண்டு என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இது பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியிலும் புயலை கிளப்பியது. இப்படி பாரதிய ஜனதா நிர்வாகிகளின் கட்சி தாவலால் ஏற்பட்ட மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது.இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமியின் உருவப்படமும் தீவைத்து எரிக்கப்பட்டது. இதற்கு எதிராக அ.தி.மு.க. வினரும் போராட்டம் நடத்தி எடப்பாடி பழனிசாமியின் போட்டோவை எரித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தினார்கள். தமிழகத்தின் பல இடங்களிலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியினர் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். இதனால் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகளை அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் தமிழகத்தில் வலுவான கட்சியாகும். தற்போது எதிர்க்கட்சி வரிசையிலும் அந்த இயக்கம் அமர்ந்துள்ளது. நாளை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்கும் தகுதியான இயக்கமாகவும் அ.தி.மு.க. உள்ளது.  இதுதெரியாமல் பேசுபவர்கள் அறியாமையில் பேசுகிறார்கள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வு மான கடம்பூர் ராஜூ அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காரசாரமான கருத்துக்களை தெரிவித் துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- பா.ஜ.க. ஐ.டி. விங் நிர்வாகி அ.தி.மு.க.வில் இணைந்தது கண்டு அண்ணாமலை மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் ஏன் பதற்றப்பட வேண்டும் என்பது எங்களுக்கு புரியாத புதிராக உள்ளது. ஒரு கட்சியில் இருந்து பிரிந்து மற்ற கட்சிகளுக்கு செல்வது சகஜமான ஒன்று. அ.தி.மு.க.வில் இருந்து பலரும் பா.ஜ.க.விற்கு சென்று உள்ளனர். அ.தி.மு.க.விற்கு பதில் தி.மு.க.வில் நிர்மல் குமார் இணைந்து இருந்தால் என்ன செய்திருப்பார்கள். கோவில்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்தவர் ஒரு விளம்பர விரும்பி. இந்த சம்பவத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர் நடவடிக்கை எடுப்பது குறித்து பொருத்து இருந்து பார்க்கலாம்.அண்ணாமலை என்ன எதிர்வினை ஆற்றுவார் என்று பார்ப்போம். ஒன்றிய அரசு என்று கூறும் தி.மு.க. விற்கு எதிராக பேசி தான் வருகிறார் தவிர எந்த எதிர்வினையும் அவர் ஆற்றவில்லை. அ.தி.மு.க. வரலாறு அண்ணாமலைக்கு தெரியாது. அவர் இன்னும் அரசியலில் பக்குவப்படவில்லை. தானாக விரும்பி வந்து கட்சியில் சேருபவர்களை எந்த அரசியல் கட்சியினரும் சேர்த்துக் கொள்வார்கள். இந்த அரசியல் அரிச்சுவடி கூட அண்ணாமலைக்கு தெரியவில்லை. எங்களுடன் பா.ஜ.க. கூட்டணி சேர்ந்த காரணத்தினால் தான் இன்றைக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் அந்த கட்சிக்கு கிடைத்துள்ளனர். 1996-ம் ஆண்டு பா.ஜ.க. அரசு மத்தியில் அமைவதற்கு அ.தி.மு.க. தான் உறுதுணையாக இருந்தது. அ.தி.மு.க.வை முந்த எந்த இயக்கமும் தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது.இவ்வாறு கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளரான வக்கீல் சேலம் மணிகண்டன் கூறும் போது, ‘அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதா நீடிப்பதால் சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இதனை அ.தி.மு.க. தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவருமே உணர்ந்துள்ளனர். கூட்டணியில் பாரதிய ஜனதா இல்லை என்றால் அ.தி.மு.க.வுடன் கைகோர்க்க தி.மு.க. கூட்டணியில் உள்ள பல கட்சிகள் தயாராகவே உள்ளன. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலே கூட அ.தி.மு.க. கூட்டணியில் சேருவதற்கு சேர பல கட்சிகள் தயாராக உள்ளன.இப்படி பாரதிய ஜனதா இல்லாத புதிய கூட்டணியையே அ.தி.மு.க. தலைவர்கள் விரும்புகிறார்கள். இதற்கு பாரதிய ஜனதா கட்சி தடையாக இருப்பதாகவே அ.தி.மு.க.வினர் கருதுகிறார்கள். 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஜெயிக்க வேண்டுமென்றால் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருக்க கூடாது என்பதே அ.தி.மு.க.வினரின் கணக்காக உள்ளது. பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை பொறுத்தவரையில் அரசியல் பக்குவம் இன்றி பேசுவதையே அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன’ என்று தெரிவித்தார். அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் ஏற்பட்ட இந்த திடீர் மோதல் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  இந்த நிலையில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ராயப்பேட்டையில் தனியார் அரங்கில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பங்கேற்றார். பின்னர் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு அவர் சென்றார். அங்கு கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம் எம்.பி. உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது பற்றியும், அ.தி.மு.க.வில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *