புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு :
![]()
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சரஸ்வதிநகர் பகுதியில் 5, ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நகர் பகுதியில் கோயில், பள்ளிவாசல், பள்ளிகள் உள்ளன. இந்நிலையில் சரஸ்வதி நகர் குடியிருப்பு மத்தியில் பள்ளிவாசல் அருகே புதியதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பகுதியில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று விட்டு கூடுதல் நேர வகுப்புகளில் பயின்றுவிட்டு இரவு நேரங்களில் வீடு திரும்புகின்றனர்.
அதோடு, இந்தத் சரஸ்வதி நகர் சாலை வழியாக ராகவேந்திரா ஆலயம், முருகப்பா காலனி, தென்றல் நகர், முல்லை நகர் ஜெயராம் நகர், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையாக உள்ளது.
இந்த சாலையில் அரசு டாஸ்மாக் கடை அமைத்தால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பெண்கள், வேலைக்கு செல்வோர், உள்ளிட்டோர் பாதிக்கப்படுவார்கள். எனவே, திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் பகுதியில் டாஸ்மாக் கடை வருவதை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

