தமிழில் பலகை வைத்து எச்சரிக்கை .
திருவள்ளூர் டிச 01 : திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க ரயில்வே நிர்வாகம் சார்பில் மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாது என்பதால் தண்டவாளத்தை கடக்கும் பாதையில் இரும்பு கேட் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அந்த இரும்பு கேட் பூட்டப்பட்டு அதற்கான சாவி நிலைய மேலாளரிடம் இருக்கும். மாற்றுத் திறனாளிகள் யாராவது செல்லவேண்டுமானால் நிலைய மேலாளரிடம் சென்று சாவி வாங்கிவந்து திறந்து செல்ல வேண்டும்.
அதற்காக வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகை திருவள்ளூர் ரயில் நிலைய நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுருந்தது. அதில் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தியில் சொல்லப்படும் திவ்யாங்ஜன் என்ற சொல்லைப் பயன்படுத்தி, ஜிவ்யாங்ஜன் பயணிகள் கேட் சாவி பணியில் இருக்கும் நிலை அதிகாரியிடம் பெற்றுக் கொள்ளுங்கள் என இந்தியை நூதன முறையில் ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதி ரயில் நிலையங்களில் எழுதி திணித்துள்ளதாக திருவள்ளூர் திமுக எம்எல்ஏ., வி.ஜி ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து திருவள்ளூர் ரயில் நிலையத்தை எம்எல்ஏ., வி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு அந்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்த இடத்தை பார்வையிட்டனர்.
எம்எல்ஏ., தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் முற்றுகையிடும் தகவலை முன்னரே அறிந்த திருவள்ளூர் ரயில்வே நிர்வாகத்தினர் அவசர அவசரமாக அந்த பலகைகளை கழற்றி அப்புறப்படுத்தினர். இதை அடுத்து திருவள்ளூர் எம்எல்ஏ., வி.ஜி ராஜேந்திரன் கொண்டு வந்த மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய இந்தப் பாதைக்கான சாவி பணியில் இருக்கும் நிலை அதிகாரியிடம் பெற்றுக் கொள்ளவும் என தமிழில் அச்சிடப்பட்ட அறிவிப்பு பலகையை இரும்பு கேட்டில் பொருத்தினர்.
இதை அடுத்து ரயில் நிலைய மேலாளரை நேரில் சந்தித்து ரயில் நிலையங்களில் இந்தியை நூதன முறையில் திணிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என எம்எல்ஏ., வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.சந்திரன் ஆகியோர் புகார் அளித்தனர். இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ., வி.ஜி.ராஜேந்திரன், மாற்றுத்திறனாளி என எழுதினால் தான் மக்களுக்கு புரியும். மக்களுக்கே புரியாத இந்தியை நுதன முறையில் தமிழில் எழுதி புரியாத அளவிற்கு இந்தியை நுழைக்கின்றனர். இது திராவிட நாடு. திராவிட நாட்டில் தமிழ் மொழி இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் இருந்தால் மட்டுமே மக்கள் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
இதில் மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிடபக்தன், திருவள்ளூர் நகர திமுக செயலாளரும், திருவள்ளூர் நகர்மன்ற துணைத் தலைவருமான சி.சு.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கூளூர் ராஜேந்திரன், அரிகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தா.மோதிலால், நிர்வாகிகள் காஞ்சிப்பாடி சரவணன், கமலக்கண்ணன், எம்.பரசுராமன், ராஜேஸ்வரி கைலாசம், சம்பத்ராஜ், குப்பன், டிஎன்ஆர்.சீனிவாசன், கே.சிவக்குமார், புட்லூர் குணா, அ.பவளவண்ணன், டி.கே.பாபு, அயூப் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.