ரூபாய் 13.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் நெல் சேமிப்பு கிட்டங்கி பணிகள்
மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், அவர்கள் செய்தியாளர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நேரில்
ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பாக ரூபாய் 13.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு கிட்டங்கி பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், அவர்கள் செய்தியாளர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மதுரை மாவட்டத்தில் சராசரியாக 59 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் மூலம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் மூலம் சாகுபடி செய்யப்படும் நெல்மணிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 143 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுத்தப்பட்டு 1.38 இலட்சம் மெட்ரிக் டன் அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்மணிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி சேமிப்பு கிட்டங்கிகளில் சேமிக்கப்படுகின்றன. சில நேர்வுகளில் கனமழையின் காரணமாக திறந்த வெளியில் சேமிக்கப்படும் நெல் மணிகள் மழையில் நனைந்து விவசாயிகள் பாதிக்கப்படும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. இதனை கருத்திற்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகள் நலனை உறுதி செய்திடும் நோக்கில் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் நெல்மணிகளை சேமித்திட கூடாது என அரசின் கொள்கை முடிவாக அறிவித்துள்ளார்கள். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பான முறையில் நெல்மணிகளை சேமித்திட ஏதுவாக மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு கிட்டங்கிகள் அமைத்திட உத்தரவிட்டுள்ளார்கள்.
அதனடிப்படையில், மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் கிராமத்தில் ரூபாய் 13.20 கோடி மதிப்பீட்டில் 18 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளலவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு கிட்டங்கி அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், அவர்கள் செய்தியாளர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இத்தகைய சேமிப்பு கிட்டங்கிகள் மூலம் விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல்மணிகளை பாதுகாப்பாக சேமித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், மதுரை மாவட்டத்தில் தேவைக்கேற்ப கூடுதலாக நெல் சேமிப்பு கிட்டங்கிகள் அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.