காக்களூரில் தொழிலாளி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி சாலை மறியல்

Loading

திருவள்ளூர் அடுத்த போளிவாக்கத்தைசேர்ந்தவர் கேசவன்(43). இவர் காக்களூரில் உள்ள தனியார்  தொழிற்சாலையில் கடந்த 18 ஆண்டுகளாக வெல்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 14-ஆம் தேதி வேலை செய்யத் தொடங்கிய போது எரிவாயு உருளை வெடித்ததால் கேசவன் நெற்றியில் படுகாயம் ஏற்பட்டது.இதையடுத்து தொழிற்சாலை சார்பில் கேசவனை திருவள்ளூர் சி.எஸ்.ஐ மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கு சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 18-ஆம் தேதி திடீரென கேசவன் மயக்கமடைந்ததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு உள்ளதை கண்டறிந்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கேசவன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பின் அவரது சடலத்தை நேற்று போளிவாக்கம் கொண்டு வந்தனர்.இந்த நிலையில் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் உயிரிழந்த தொழிலாளர் கேசவன் குடும்பத்தினருக்கு எந்த உதவியும் செய்யவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கேசவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் போளிவாக்கத்தில்  திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணவாளநகர் இன்ஸ்பெக்டர் அந்தோனி ஸ்டாலின் உள்ளிட் ட போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது, உயிரிழந்த தொழிலாளி கேசவனுக்கு  காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளதால் குடும்பத்தினருக்கு வாழ்வாதாரம் ஏதுமில்லை.
அதனால் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதனையடுத்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் இதுகுறித்து பேசி இழப்பீடு தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதி அளித்தனர்.அதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் சாலையில் ஒரு மணிநேரம் வாகன போக்குவரத்து ஏற்பட்டது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *