ரயிலில் தள்ளி விடப்பட்டு மாணவி கொலையான விவகாரம் : பஞ்சாயத்து செய்த காவல்துறைக்கு ராமதாஸ் கண்டனம்
சென்னை, அக்- 15
ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்டு கல்லூரி மாணவி சத்யா கொல்லப்பட்ட விவகாரத்தில் காவல்துறையின் செயலுக்கு டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை
சென்னை பரங்கிமலை புறநகர் தொடர்வண்டி நிலையத்தில், காதலை ஏற்க மறுத்ததற்காக மாணவி சத்யா தொடர்வண்டி முன் தள்ளிவிட்டு படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாகவே, அவரது தந்தை மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. காதல் என்ற பெயரில் அரங்கேற்றப்பட்ட இந்த கயமை கண்டிக்கத்தக்கது. மாணவி சத்யா, அவரது தந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
காதல் புனிதமானது என்பதில் ஐயமில்லை. இருவர் மனமும் ஒன்றுபடும் போதும், ஒருவரின் உணர்வுகளை இன்னொருவர் மதிக்கும் போதும் தான் காதல் புனிதமடையும். தொடக்கத்தில் சதீஷை காதலித்த சத்யா, பின்னர் அவரது தீய பழக்கங்களை அறிந்து தான் விலகிச் சென்றுள்ளார். அதை மதித்து சதீஷ் விலகியிருக்க வேண்டும். அது தான் சத்யா மீது சதீஷ் கொண்ட காதலுக்கு மரியாதையை சேர்த்து இருக்கும். அதற்கு மாறாக, நான் விரும்பினால் நீயும் விரும்ப வேண்டும்; இல்லாவிட்டால் படுகொலை செய்வேன் என்பது அரக்கத்தனமானது. இந்த கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
சத்யா காதலிக்க மறுத்த நிலையில், அவரிடம் கடந்த சில மாதங்களில் சதீஷ் 5 முறை தகராறு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரு முறை சத்யா படிக்கும் கல்லூரிக்கு சென்ற சதீஷ், அங்கு பலர் முன்னிலையில் அடித்து உதைத்ததாக தெரிகிறது. இரு முறை சத்யாவை கொலை செய்ய முயன்றதாக சதீஷ் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். ஒரு கட்டத்தில் இது குறித்து சத்யா குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். ஆனால், இருவரின் குடும்பத்தினரும் காவல்துறையில் பணி செய்வதை காரணம் காட்டி, சதீஷ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்து காவல்துறையினர் அனுப்பி வைத்து விட்டதாக கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்ட துணிச்சல் தான் மாணவி சத்யாவை கொலை செய்ய தூண்டியிருக்கிறது. காவல்துறையின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
ஆண்களைப் பெற்ற பெற்றோர் தங்களின் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி வழங்க வேண்டும்; அதற்கும் மேலாக பெண்களை மதிக்கும் குணத்தை கற்றுத்தர வேண்டும். பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை நல்வழிப்படுத்த தவறியதன் விளைவு தான்
தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலம் என்று கூறப்பட்டாலும் கூட, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளும், அலுவலகம் செல்லும் பெண்களும் அச்சமின்றி சுதந்திரமாக சென்று வர முடியாத நிலைமை தான் இப்போதும் தொடர்கிறது. பெண்களை பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை மற்றும் சீண்டல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். இதற்காக மகளிர் தனிக்காவல் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்கள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் தடுக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்,