பிரசவித்த மனைவியை சொந்த காரில் அழைத்துச் செல்ல முயன்ற கணவர் மீது ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தாக்குதல்..!
ஆந்திரா:
ஆந்திர மாநிலம், அனகாபள்ளி மாவட்டம், எஸ். ராயவரம் மண்டலம் தர்மபவரம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ். இவரது மனைவி ஜான்சி. நிறைமாத கர்ப்பிணியான ஜான்சிக்கு கடந்த 19-ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஜான்சியை பிரசவத்திற்காக சேர்த்தனர். 20-ந் தேதி ஜான்சிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜான்சியை நேற்று டாக்டர்கள் டிஸ்சார்ஜ் செய்தனர்.
இந்நிலையில் மனோஜ் தனது மனைவி மற்றும் குழந்தையை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக காரை எடுத்து வந்தார். இதனைக்கண்ட அங்கிருந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் எங்களுடைய ஆம்புலன்ஸ் வாகனத்தில் மட்டுமே தாயையும் குழந்தையையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்றனர்.
தன்னுடைய சொந்த கார் இருக்கும்போது நான் ஏன் ஆம்புலன்சில் என்னுடைய மனைவி மற்றும் குழந்தையை அழைத்து செல்ல வேண்டுமென மனோஜ் தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஒன்றுசேர்ந்து மனோஜை சரமாரியாக தாக்கினர். இதில் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.
இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தில் மனோஜ் புகார் அளித்தார். மனோஜ் மீது நடந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
சமீபத்தில் திருப்பதி ரூயா ஆஸ்பத்திரியில் இறந்த சிறுவனின் உடலை 90 கிலோ மீட்டர் கொண்டு செல்ல ரூ 20 ஆயிரம் வாடகை கேட்டதால் தனது மகனின் பிணத்தை பைக்கில் கொண்டு சென்ற நிலையில் விசாகப்பட்டினம் ஆஸ்பத்திரியில் பிரசவித்த தாய் மற்றும் குழந்தையை தனியார் ஆம்புலன்சில் தான் அழைத்துச் செல்ல வேண்டும் என கூறி அவரது கணவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.