ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

Loading

புதுடெல்லி, மார்ச் 10-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விவகாரத்தில் 19 வயதில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு நிலுவையில் உள்ள நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக பேரறிவாளனுக்கு கடந்த 10 மாதங்களாக தமிழக அரசு பரோல் வழங்கி வந்தது.

இதனிடையே பரோல் கிடைத்தாலும் பேரறிவாளன் யாரையும் சந்திக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் பேரறிவாளன் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டது போல் உள்ளதாகவும் எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதங்கள் பின்வருமாறு.

உச்சநீதிமன்றம் : பேரறி வாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யும் தமிழக அரசு முடிவு சட்டப்படியானதுதானே. 7 தமிழர் விடுதலையில் தமிழக அரசின் முடிவை ஆளுநர், ஒன்றிய அரசு ஏற்க மறுப்பது ஏன்?.மாநில அரசின் முடிவை ஒன்றிய அரசுக்கு ஆளுநர் அனுப்பியது ஏன்?
மத்திய அரசு: பேரறிவாளன் விவகாரம் தங்கள் அதிகாரத்தின் கீழ் வரும் போது தமிழக அரசு முடிவெடுக்க முடியாது.சம்பந்தப்பட்ட அரசுதான் விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சிறை விதிகளுக்கு உட்பட்டு பரோல் வழங்கலாமே தவிர நிச்சயம் ஜாமீன் வழங்க கூடாது.

உச்சநீதிமன்றம் : அதிகாரம் பற்றி பிறகு விசாரிக்கிறோம். இப்போது ஜாமீன் பற்றி விசாரிக்கலாம்.ஆளுநர் தனது விருப்பப்படி முடிவெடுப்பதற்கு அதிகாரம் உள்ளவரா ?
மத்திய அரசு : பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்க இயலாது. குடியரசு தலைவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தியே முடிவெடுக்க முடியும்.

உச்சநீதிமன்றம் : பேரறிவாளன் ஏற்கனவே 30 ஆண்டுகளாக சிறையில் தானே உள்ளார்.இன்னும் தாமதம் செய்வதை எப்படி ஏற்பது?
மத்திய அரசு: பேரறிவாளன் மரண தண்டனைக் கைதி, அதோடு தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டது மீண்டும் ஒரு சலுகையை எப்படி ஏற்பது?

உச்சநீதிமன்றம்: தண்டனைக் குறைப்பு உச்சநீதிமன்றம் வழங்கியது தானே. அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் கைதிகள் தண்டனை குறைப்பு தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்கிற போது அதே அரசியல் சாசனத்தின் 432-வது பிரிவின் கீழ் கைதிகள் தண்டனை குறைப்பு அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டும் எப்படி கிடைக்கும்.அத்துடன் கைதிகள் விடுதலை, தண்டனை குறைப்பு தொடர்பாக முடிவெடுக்க அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு.

மத்திய அரசு : ஆயுள் தண்டனை என்றால் ஆயுள் முழுக்க சிறையில் இருக்க வேண்டும் என்பது தான். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
உச்சநீதிமன்றம், அது எங்களுக்கு தெரியும். அது குறித்து பிறகு முறையீடு செய்வோம். இப்போது பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்குவோம். பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்குவதில் உச்சநீதிமன்றம் தீர்மானமாக உள்ளது. பலமுறை சிறை விடுப்பில் இருந்தும் பேரறிவாளன் மீது எந்தப் புகாரும் இல்லை.

பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக இருப்பதன் காரணங்களாலும் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள பேரறிவாளனின் உடல்நிலை, கல்வித் தகுதியை கருத்தில் கொண்டும் பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கப்படுகிறது. ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதந்தோறும் முதல் வாரத்தில் பேரறிவாளன் ஆஜராக வேண்டும். வாதங்களுக்கு பிறகு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *