சுற்றுச்சூழலுடன் காதல் புரியம் இந்திய ரயில்வே
![]()
சுற்றுச்சூழலுடன் காதல் புரியம் இந்திய ரயில்வே
– வி.கல்யாண ராமா,
தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்
ரயில்வே கட்டுமானக் கழகம்
நான் எனது குடும்பத்தினருடன், கோடை விடுமுறைக்காலங்களில்
மேற்கொண்ட ரயில் பயணங்கள் தான், ரயில்வே என்றவுடனேயே
எனக்கு முதலில் நினைவுக்கு வருகின்றன. சிறுவன் என்ற
முறையில், ஜன்னல் ஓர இருக்கையில் அமர்வதும், மரங்கள்
மற்றும் கட்டடங்கள் பின்னோக்கி நகர்வதை வேடிக்கை பார்ப்பதும்
தான், நம்மைப் பெரிதும் ஈர்க்கும்.
நீராவி எஞ்சின்களிலிருந்து வெளியாகும் கரும்புகைத் துகள்
கண்ணில் படுவதைத் தவிர, இது ஒரு அருமையான அனுபவம்
ஆகும். அந்தக் காலத்தில் பெரும்பாலான ரயில்கள், நிலக்கரியை
எரிப்பதன் மூலம் இயங்கும். நீராவி என்ஜின்களால்
இயக்கப்பட்டதால், அவை தங்களது பங்கிற்கு, காற்றை மாசுபடுத்தி
வந்தன. ரயில்களை இயக்கத் தேவையான நீராவியை உற்பத்தி
செய்ய பெருமளவு தண்ணீரும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்தக்
காலத்தில், மரத்தாலான ஸ்லீப்பர் கட்டைகள் மீது தான்
தண்டவாளங்கள் பொருத்தப்பட்டிருந்தன. சிக்னல் கம்பங்களும் மரக்
கம்பங்களாக இருந்ததுடன், பல்வேறு கட்டடங்களிலும்,
பெருமளவிலான மரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. எனவே,
ரயில்வே செயல்பாடுகள் இயற்கை வளங்களை அதிகளவில்
பயன்படுத்துவதாக இருந்தது. எனவே, ரயில்வேத்துறை
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கி, கடந்த 50
ஆண்டுகளில் அனைத்துப் பிரிவுகளையும் துரிதகதியில்
நவீனமயமாக்கியது. அதன் காரணமாகவே, ரயில்வேதுறை
சுற்றுச்சூழல் மீது காதல் கொண்டு, அதனைப் பாதுகாக்கும்
முயற்சியிலும் நாம் ஈடுபட்டுள்ளோம்.
ரயில்வேதுறை, மரக்கட்டையால் ஆன ஸ்லீப்பர்களை மாற்றி
கான்கிரீட் ஸ்லீப்பர்களைப் பதித்துள்ளது, இந்த ஸ்லீப்பர்கள்,
தண்டவாளத்தின் வலிமை மற்றும் பாரம் சுமக்கும் திறனை
அதிகரித்திருப்பதோடு, பெருமளவிலான காடுகள்/ மரக்கட்டைகளின்
பயன்பாட்டையும் குறைத்துள்ளது. மரத்தாலான அனைத்து
அமைப்புகளும், இரும்பால் ஆனவையாக மாற்றப்பட்டுள்ளன.
தற்போது இந்திய ரயில்வே, தனது பரந்து விரிந்த கட்டமைப்பில்,
மரத்தால் ஆன ஒரு ஸ்லீப்பர் கட்டையைக் கூட
பயன்படுத்துவதில்லை.
நீராவி எஞ்சின்கள், டீசல் என்ஜின்களுக்கு வழிவிட்டு, நீராவி
என்ஜின்கள் பழம்பொருட்களாக மாறிய, கண்காட்சியில்
வைக்கப்பட்டு இருப்பதுடன், அவ்வப்போது பாரம்பரிய ஓட்டமும்
நடத்தப்படுகிறது. தற்போது, டீசல் என்ஜின்களும், மின்சார
என்ஜின்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிவிட்டன. இன்றைய தேதியில்,
இந்திய ரயில்வேயின் அகலப்பாதையில் 70% அளவிற்கு,
மின்மயமாக்கப்பட்டிருப்பதுடன், 2023 டிசம்பருக்குள் அகல ரயில்
பாதைகளை 100% மின்மயாக்குவதன் மூலம், புதைபடிவ
எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் காற்று
மாசுபடுவதைக் குறைப்பதோடு, நாட்டிற்கு பெருமளவிலான
அன்னியச் செலாவணி சேமிப்புக்கும் வழிவகுக்கப்பட்டுள்ளது.
சரக்குகளை சாலையில் எடுத்துச் செல்வதைவிட ஆறு மடங்கு
அதிக திறனுடன், பெருமளவிலான சரக்குகளை திறம்பட எடுத்துச்
செல்லும் விதமாக, ரயில்வேத் துறை ஒட்டுமொத்தமாக
மேம்படுத்தப்பட்டு வருகிறது. தொடக்கத்திலிருந்தே ரயில்வே
துறை இந்த வகையில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதோடு,
பிற்காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், சரக்குப் போக்குவரத்து
திறனை அதிகரித்துள்ளன. இந்திய ரயில்வேயில் மேற்கொள்ளப்பட்ட
முக்கிய மாற்றங்களில் ஒன்றாக, அதிக பெட்டிகளைக் கொண்ட
சரக்கு ரயில் போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்டதுடன், துண்டு
துண்டாக நடைபெற்று வந்த சரக்குப் போக்குவரத்தும்
நிறுத்தப்பட்டது. இது, விரைவான சரக்குப் போக்குவரத்துக்கு
உதவியதுடன், சாலை மற்றும் ரயில் போக்குவரத்து
துறைகளிடையே அதிக ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, பன்முனை
போக்குவரத்து வளர்ச்சிக்கும் வழிவகுத்தது.
மேம்பட்ட போக்குவரத்துக்கு ஏதுவாக, பிரத்யேக சரக்கு
ரயில்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,
நமக்கு விரைவில் இரண்டு பிரத்யேக சரக்கு ரயில் பாதைகள், (உ-ம்)
மேற்கு மற்றும் கிழக்கு பிரத்யேக சரக்கு ரயில் பாதைகள்
விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளன. இந்த பிரத்யேக சரக்கு
ரயில் பாதைகள், அதிக அளவிலான சரக்குகளை, துரித வேகத்தில்
எடுத்துச் செல்வதோடு, நீண்டகால அடிப்படையில் மிகக்குறைந்த
அளவிலான கார்பனை வெளியேற்றும் பசுமைப் போக்குவரத்து
கட்டமைப்பாகவும் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சியில்
ஒரு பகுதியாக, தற்போது நடைபெற்றுவரும் மேற்கு மற்றும் கிழக்கு
பிரத்யேக சரக்கு ரயில் பாதைகளும், கிழக்குக் கடற்கரை (காரக்பூர்
-விஜயவாடா) பிரத்யேக சரக்கு ரயில் பாதை மற்றும் வடக்கு –
தெற்கு (விஜயவாடா- நாக்பூர்-இடார்ஸி) பிரத்யேக சரக்கு
ரயில்பாதைகளுக்கான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பிரத்யேக சரக்கு ரயில்பாதைகள், சாலை வழியாக
மேற்கொள்ளப்படும் சரக்குப் போக்குவரத்திலிருந்து ரயில் வழிப்
போக்குவரத்துக்கு மாறும்போது, சரக்கு ரயில் போக்குவரத்து
தற்போதைய 30%-லிருந்து 45%-மாக அதிகரிக்க வகைசெய்வதுடன்,
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமைப் போக்குவரத்தாக
சரக்குப் போக்குவரத்தை மாற்றியமைக்கும்.
மற்றொரு முக்கிய நடவடிக்கையாக, ரயில் மூலம் சரக்குப்பெட்டக
போக்குவரத்தை மேற்கொண்டதன் மூலம், இந்திய ரயில்வே,
திறன்மிக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறையை
செயல்படுத்தியது. இந்தியாவில் சரக்குப்பெட்டகப் போக்குவரத்து
தொடங்கிய காலம் முதற்கொண்டே, சரக்குப் பெட்டக
போக்குவரத்தின் முக்கியத்துவத்தை இந்திய ரயில்வே
அங்கீகரித்தது. இந்திய ரயில்வே மேற்கொண்ட பிற முயற்சிகளும்,
ரயில்வே சரக்குப் பெட்டக போக்குவரத்து வளர்ச்சிக்கு வழிவகுத்தன.
இந்திய சரக்குப் பெட்டக கழகம் (CONCOR) 1989-ம் ஆண்டு
தொடங்கப்பட்டு, குறிப்பாக ரயில்வே சரக்குப் பெட்டக
போக்குவரத்தை மேம்படுத்த உதவியது. தொடக்க காலத்தில்
குறைந்த அளவிலான சரக்குப் பெட்டகங்கள் ரயில் மூலம் எடுத்துச்
செல்லப்பட்ட நிலையில், மணிக்கு 100கி.மீ. வேகத்தில்
இயங்கக்கூடிய அதிவேக பிஎல்சி வேகன்களை
அறிமுகப்படுத்தியதன் மூலம், ரயில்வே சரக்குப் பெட்டக
போக்குவரத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு, ஒரு ரயிலில்
20அடி நீளமுள்ள 90 பெட்டகங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது.
இரட்டை அடுக்கு சரக்குப் போக்குவரத்து அறிமுகம்
செய்யப்பட்டதன் மூலம், கடந்த 6 முதல் 7 ஆண்டுகளில், 20அடி
நீளமுள்ள சரக்குப் பெட்டகங்களின் எண்ணிக்கை 90-லிருந்து 180-ஆக
அதிகரித்துள்ளது. பிரத்யேக சரக்கு ரயில் பாதைகள்
செயல்பாட்டிற்கு வரும்போது, இந்த அளவு மேலும் அதிகரிக்கும்,
ஏனெனில், இந்த வழித்தடத்தில், ஒவ்வொரு ரயிலிலும் 20 அடி
நீளமுள்ள 400 பெட்டகங்களை எடுத்துச் செல்லக்கூடிய இரட்டை
அடுக்கு சரக்குப் பெட்டகங்களை மிக நீண்ட தூரத்திற்கு ஏற்றிச்
செல்லும் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும். சாலை மற்றும் ரயில்
போக்குவரத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு, இது மற்றொரு
சிறந்த உதாரணமாக அமைவதுடன், சாலை மார்க்கமாக
கொண்டுவரப்படும் சரக்குகள், பெட்டகங்களில் அடைக்கப்பட்டு,
ரயில் மூலம் நீண்ட தூரத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
உயிரி-கழிவறைகள், தண்ணீரைச் சேமிப்பதற்கான வெற்றிட சுத்தம்
செய்யும் முறை, மின்சாரத்தை சேமிக்க எல்இடி விளக்குகள்
போன்றவற்றை அறிமுகப்படுத்தியதன் மூலம் சுற்றுச்சூழலைப்
பாதுகாக்க, மேலும் பல முயற்சிகளை இந்திய ரயில்வே
மேற்கொண்டு இருப்பதுடன், வந்தே பாரத் போன்ற சுற்றுச்சூழலுக்கு
உகந்த புதிய ரயில் பெட்டிகள், மறுசுழற்சி முறைகளும்
அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதுடன், ரயில் சக்கரத் தொழிற்சாலை
போன்ற, மேம்பட்ட திறன் கொண்ட உற்பத்திப் பிரிவுகள், பல்வேறு
இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள்
அமைக்கப்பட்டிருப்பது, ரயில்வே கடவுகள் அகற்றம் போன்ற
நடவடிக்கைகள், குறைந்த அளவிலான நிறுத்தங்கள் மற்றும்
விரைவான போக்குவரத்திற்கு வழிவகுத்துள்ளது.
நிறைவாக, இந்திய ரயில்வே மற்றும் பிற ரயில்வே அமைப்புகள்
சமீபத்தில் மேற்கொண்ட ஒரு முன்முயற்சியை சுட்டிக்காட்ட
விரும்புகிறேன், உதாரணமாக, மின்னணு-அலுவலகம், மின்னணு-
டெண்டர், மின்னணு-டிக்கெட் போன்றவை காகிதப் பயன்பாட்டைக்
குறைத்திருப்பதன் வாயிலாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்திய
ரயில்வே அடியெடுத்து வைத்துள்ளது.
சுற்றுச்சூழல் மீது காதல் வயப்படுவதும், அதனைப் பாதுகாப்பதும்,
இந்திய ரயில்வேயின் தொடர் நடவடிக்கையாக இருக்கும்.
