திருவேற்காடு நகராட்சியில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகள் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா நேரில் ஆய்வு
திருவள்ளூர் ஏப் 24 : திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி, தேவி நகர், 2-வது தெருவில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக அமைக்கப்பட்டிருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதியினை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா நேரில் பார்வையிட்டு, கிருமி நாசினிகள் தெளிப்பது, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டு பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள்; போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் 3 அல்லது அதற்கு மேல் நோய்த்தொற்று கண்டறியப்படும் பட்சத்தில் தொடர் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.நடமாடும் வாகனத்தின் வாயிலாக சளிமாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதில் தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவது அல்லது அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவர்.
மாவட்டத்தில் தற்பொழுது 2555 நபர்களுக்கு தொற்று ஏற்பட்டு, 1869 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது கோவிட் கேர் மையங்களில் உள்ளனர். மீதம் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் 45 வயதை கடந்த 200 நபர்கள் வரை சிறப்பு மருத்துவ முகாம்கள் வாயிலாக தடுப்பூசிகள் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவமனைகளில் 350-க்கும் மேற்பட்ட படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளன. மேலும் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது.
முதல் தவணையாக 1,61,000 நபர்களும், இரண்டாம் தவணையாக 34,000 நபர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 01.05.2021-தேதிக்குப் பின்னர் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்படவுள்ளது. இதனால் பொதுமக்கள் எந்தவித அச்சமும், தயக்கமும் இன்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று கூறினார்.
இதில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ஜவஹர்லால், திருவேற்காடு நகராட்சி ஆணையர் எம்.ஆர்.வசந்தி, சுகாதார ஆய்வாளர் எஸ்.ஆல்பர்ட் அருள்ராஜ், மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.