வந்தவாசி மற்றும் தெள்ளார் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3 கிராம ஊராட்சிகளில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திறந்து வைத்தார்…
வந்தவாசி மற்றும் தெள்ளார் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட
3 கிராம ஊராட்சிகளில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்
மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திறந்து வைத்தார்…
திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் ஊராட்சி ஒன்றியம், சத்தியவாடி கிராம ஊராட்சி, வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், மருதாடு கிராம ஊராட்சி, கீழ்குவளைவேடு கிராம ஊராட்சி ஆகிய 3 கிராம ஊராட்சிகளில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை மூலமாக முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. சேவூர் எஸ். இராமச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பார்வையிட்டு, கர்ப்பினி தாய்மார்களுக்கு அம்மா மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்தீப் நந்தூரி, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் திரு. தூசி கே. மோகன், செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குநர் மரு. சங்கீதா, அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், வட்டார மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விழாவில் பேசியதாவது ‘மக்களால் நான், மக்களுக்காக நான் என மக்களாட்சி நடத்தி வங்கக் கடலோரம் சந்தனப் பேழையில் துயில் கொண்டிருக்கும் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் வழி நடத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு அம்மாவின் அரசு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நகரத்தில் கிடைக்கும் மருத்துவ சிகிச்சை கிராமங்களிலும் கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் 2000 ‘முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்’ திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் 73 கிராமங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டு வருகிறது, முதல் கட்டமாக 23 கிராமங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டது. தற்போது, இரண்டாம் கட்டமாக முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் 40 கிராமங்களில் திறக்கப்பட்டு வருகிறது. மேலும்,
10 நடமாடும் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் செயல்படவுள்ளது.
முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் காலை 08.00 மணி முதல் 12.00 மணி வரையும், மாலை 04.00 மணி முதல் 07.00 மணி வரையும் செயல்படும். இந்த மினி கிளினிக்கில் இரத்தத்தில் சர்க்கரை, சிவப்பணுக்களின் எண்ணிக்கையை காணுதல், சிறுநீரில் உப்பு, கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் சிறுநீர் பரிசோதனை, காசநோய் காணும் சளி பரிசோதனை, இ.சி.ஜி. பரிசோதனை, எடை மற்றும் உயரம் பார்த்தல், இரத்த அழுத்தம் பார்த்தல் ஆகிய சிகிச்சைகள் பொதுமக்களுக்கு அளிக்கப்படவுள்ளது. மேலும், கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனை, பிரசவத்திற்கு வருபவர்களுக்கு உடனடி பரிசோதனை செய்து பரிந்துரை செய்தல், பச்சிளம் குழந்தைகள் பரிசோதனை, சிறு நோய் சிகிச்சை ஆகிய சிகிச்சைகளும், சளி, இருமல், காய்ச்சல், காயம் மற்றும் சிறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். வெறிநாய் கடிக்கு உடனடி சிகிச்சையும், தடுப்பூசியும் வழங்கப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழர்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடுவதற்காக 2.10 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தலா ரூ.2500/-ம் வழங்கப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கிராமத்தில் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் கல்வி பயின்ற காரணத்தால், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கணவு நனவாக்கும் வகையில் நீட் நழைவுத் தேர்வில் 7.5மூ உள்ஒதக்கீடு வழங்கினார்கள். இதன் அடிப்படையில் தமிழகத்தில் 435 மாணவர்கள் மருத்தும் படிக்க இடம் கிடைத்து, அவர்களின் மருத்துவ செலவு கட்டணமும் அரசு முழுமையாக ஏற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த 12 மாணவர்கள் மருத்துவம் படிக்க சேர்ந்துள்ளனர். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றுள்ள 16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்து, அவர்களின் வாழ்வாதாரம் உயர வழிவகை ஏற்படுத்தி தந்துள்ளார்’ என்றார்.
தெள்ளார் ஊராட்சி ஒன்றியம், சத்திவாடி கிராம ஊராட்சியில் திறக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் மூலம் சத்தியவாடி, மாவலவாடி, அருங்குணம், கொண்டையாங்குப்பம், படுர், எஸ்.காட்டேரி, பழவேரி, பெரியகுப்பம், மடம், தெய்யார் ஆகிய கிராமங்களை சேர்ந்த 11,000 பொதுமக்கள், 22 கி.மீ. வந்தவரி அரசு மருத்துவமனை,
15 கி.மீ. தெள்ளார் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 10 கி.மீ. நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று சிகிச்சை பெறும் நிலை மாற்றப்பட்டுள்ளது.
வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், மருதாடு கிராம ஊராட்சியில் திறக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் மூலம் மருதாடு, மருதாடு காலனி, கல்லாங்குத்து, கல்லுகொள்ளமேடு, காவேரிபாக்கம், ஜன்னமேடு, புன்னை, கடைசிகுளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 10,000 பொதுமக்கள், 7 கி.மீ. வந்தவரி அரசு மருத்துவமனை, 4 கி.மீ. வழுர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 5 கி.மீ. ஓசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று சிகிச்சை பெறும் நிலை மாற்றப்பட்டுள்ளது.
வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், கீழ்குவளைவேடு கிராம ஊராட்சியில் திறக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் மூலம் கீழ்குவளைவேடு, சேத்பட், சுண்ணாம்புமேடு, தென்சேந்தமங்கலம், காரணை, எறும்பூர், தெள்ளுர், பழஞ்சூர், திருமுண்டி, வீரம்பாக்கம், எச்சூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 31,000 பொதுமக்கள், 10 கி.மீ. வந்தவரி அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை பெறும் நிலை மாற்றப்பட்டுள்ளது.
மாண்புமிகு அமைச்சர் அவர்கள், வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், கீழ்குவளைவேடு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் பார்வை கிளை நிலையம் திறந்து வைத்தார். இந்த கால்நடை கிளை நிலையம் பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய நாட்களில் காலை 08.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க திறந்திருக்கும். மேலும், இதன் மூலம் கீழ்குவளைவேடு, பழஞ்சூர், பாடித்தாங்கல், சுண்ணாம்புமேடு, சேத்பட், திரும்பூண்டி, எறும்பூர் ஆகிய கிராமங்களில் உள்ள கால்நடை விவசாயிகள் பயனடைவார்கள்.
முன்னதாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள், வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் 2020-2021 ஆம் ஆண்டு ரூ.3.10 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படவுள்ள வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருவண்ணாமலை மாவட்டம்.