திருவண்ணாமலையில் புறா பந்தயத்தில் 2முறை முதலிடம் பிடித்த வாலிபர்…
திருவண்ணாமலை பிப் 15.
மன்னர் காலத்தில் தூது சென்ற புறாக்கள் தற்போது பந்தயத்தில் சாதனை படைத்து வருகின்றன. இத்தகைய புறாக்களை வளர்த்து போட்டிக்கு தயார் செய்வதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
திருவண்ணாமலை செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் அசோக்(வயது39) இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பந்தய புறா வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் தனது வீட்டில் கூண்டு அமைத்து 150 புறாக்களை வளர்த்து வருகிறார். அவைகளுக்கு பயிற்சி அளித்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்க செய்து வருகிறார். 5ஆண்டுகளுக்கு முன்பு இவர் வளர்த்து வந்த புறா கன்னியாகுமரியில் இருந்து 500 கிலோ மீட்டர் பறந்து வந்து பந்தயத்தில் முதலிடம் பிடித்தது. இதேபோல கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற புறா பந்தயத்தில் அசோக் வளர்த்த புறா ஆந்திராவிலிருந்து 500 கிலோ மீட்டர் தூரம் பறந்து வந்து பந்தயத்தில் முதலிடம் பிடித்தது.
இப்போட்டியில் வெற்றி பெற்றதற்காக அவருக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
தற்போது அசோக் வளர்த்துவரும் புறாக்கள் நாக்பூரில் இருந்து திருவண்ணாமலை வரை நடைபெறும் 1000 கிலோமீட்டர் பந்தயத்தில் பங்கேற்றுள்ளன.
இந்த ஆண்டுக்கான புறா பந்தயங்கள் கடந்த
ஜனவரி 6-ந்தேதி தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் 170 கிமீ ,230 கிமீ, 450 கிமி,550 கி.மீ .650 கி.மீ, 800 கி.மீ 1000 கி.மீ .போட்டிகளில் அசோக் வளர்க்கும் புறாக்கள் பங்கேற்கின்றன.
பந்தய புறா வளர்ப்பு குறித்து அசோக் கூறும்போது, தோமர் வகையை சேர்ந்த பந்தய புறா வளர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 150 புறாக்கள் வளர்த்து வருகிறேன். அவைகளுக்கு பயிற்சி கொடுக்கும் போது 10கிலோமீட்டர் தூரத்துக்கு பயிற்சியை தொடங்குவேன். பின்னர் படிப்படியாக தூரத்தை அதிகரித்து பயிற்சி அளிப்பேன். பந்தய புறாக்கள் வளர்க்கும் வீட்டின் அடையாளத்தை மறக்காமல் வந்து
சேரக்கூடியவை.
இந்தப் புறாக்கள் போட்டியில் பங்கேற்கும் போது டவர் பகுதியில் பறக்கும் போது மின்காந்த அலைகளால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதும் உண்டு. போட்டியில் பங்கேற்கும் புறா பல நாட்கள் கழித்து வீட்டுக்கு வரும் போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும் தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பந்தய புறா வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.