ஊராட்சி மன்றத் தீர்மானத்தின்படி சாலை பணிகளை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊராட்சிமன்றத்தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை……
திருவண்ணாமலை பிப்.15
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது .
அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் களும் ஊரகவேலைவாய்ப்பு அனைத்து பணிகளையும் தங்கள் மூலமாக செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர் .இப்பணிகளை பொறுத்தமட்டில் வேலை அட்டை, பட்ஜெட், கிராமசபை பணிகளை தேர்வு செய்தல் ,சமூக தணிக்கை, பதிவேடுகளை பராமரித்தல் போன்ற பணிகள் ஊராட்சிமன்றத் தலைவர்கள் மூலமாகவே செயல்படுத்தப்படுகிறது .ஆனால் பணி வேலைக்கான உத்தரவுகள் ஊராட்சி செயலாளர் பெயரில் வழங்கப்படுகிறது. ஊராட்சி செயலர் ஊராட்சிமன்றத் தலைவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் .
இந்நிலையில் அப்பணிகளை செய்வதற்கு ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் , அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முயற்சிப்பது ஊராட்சி மன்ற தலைவர்களின் உரிமையில் தலையிடும் செயலாக உள்ளது. ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பணிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலையிடுவதில்லை .அப்படி இருக்கையில் ஊராட்சிமன்ற தலைவர் செய்யவேண்டிய பணிகளில் அவர்கள் தலையிடுவது எங்கள் உரிமையை பறிக்கும் செயலாகும் .
எனவே இனிவரும் காலங்களில் இப்பணிகள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கட்டுப்பாட்டில் நடைபெற ஆவணம் செய்ய வேண்டும் .
மேலும் 14-வது நிதிக்குழு சில ஊராட்சிகளில் சாலை பணிகளை தேர்வு செய்து டெண்டர் விடும் தருவாயில் ஊராட்சி மன்றத் தீர்மானம் இல்லாமல் டெண்டர் விடக்கூடாது என்று அதனை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.இதனால் அந்த நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு ஊராட்சி மன்ற தீர்மானத்தின்படி புதிய சாலை பணிகளை தேர்வு செய்து ஊராட்சி தலைவர்கள் டெண்டர் விட அனுமதி வழங்க வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.