திருவள்ளூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : முதியோர் ஓய்வூதியத்திற்கான ஆணைகள் : மாவட்ட ஆட்சியர் வழங்கினார் :
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமை தாங்கினார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து இருந்த பொதுமக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்யவும், உதவிகள் வழங்கிடவும் கோரி மனுக்களை அளித்தனர். இதில் நிலம் சம்பந்தமாக 113 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் 21 மனுக்களும், சட்டம் மற்றும் ஒழு;ங்கு 11 மனுக்களும், வேலைவாய்ப்பு 14 மனுக்களும், பசுமை வீடு 33 மனுக்களும்; மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 92 மனுக்களும்; ஆக மொத்தம் 284 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் வருவாய்த்துறை சார்பாக, கடந்த வாரம் மனு கொடுத்து, உரிய பரிசீலனைக்குப் பின்னர் 5 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியத்திற்கான ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, 4 மாற்றுத்தினாளிகளுக்கு தொழில் துவங்குவதற்கான வங்கி கடன் மானியமாக ரூ.30,000-த்திற்கான காசோலைகளையும் ஆட்சியர் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பாலகுரு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.