வேளாண் கடன் தள்ளுபடியை பரஞ்சோதி தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுக …
திருச்சி: வேளாண் கடன் தள்ளுபடி செய்து அறிவித்ததை திருச்சியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் கடந்த 2016ம் ஆண்டு முதல் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெறப்பட்ட சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் பயிர் கடன் தொகையை தள்ளுபடி செய்து அறிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த வகையில் முதலமைச்சரின் இந்த அறிவிப்பை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடினர். திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் தில்லைநகர் மெயின் ரோட்டில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியின்போது மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், ஆதாளி, மணிகண்டம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வேளாண் கடன் தள்ளுபடி செய்து அறிவித்த முதலமைச்சருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து அதிமுகவினர் கோஷமிட்டனர்.