திருவள்ளூரில் 10 மாதங்களுக்கு பிறகு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ரூ.10.84 லட்சம் நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் 10 மாதங்களுக்கு பிறகு திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமை தாங்கினார்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் முகக்கவசத்துடனும், சமூக இடைவெளியுடனும் தங்களது குறைகளை நிவர்த்தி செய்யவும், உதவிகள் வழங்கிடவும் கோரி மனுக்களை அளித்தனர். இதில் நிலம் சம்பந்தமாக 79 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் 22 மனுக்களும், கடனுதவி 5 மனுக்களும், வேலைவாய்ப்பு 15 மனுக்களும்; மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 90 மனுக்கள் என மொத்தம் 211 மனுக்கள் பெறப்பட்டன.

இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1,24,000 மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொறுத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும்,80 கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9,60,000 மதிப்பிலான விலையில்லா கைப்பேசிகள் என மொத்தம் 82 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 10,84,000-ம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பாலகுரு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
========================================================================================

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *