ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து என்கிற முதல்வரின் அறிவிப்புக்கு தமிழ்நாடு தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வரவேற்பு
ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர் ஆசிரியர் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்
படுவதாக அறிவித்துள்ள தமிழக அரசின் அறிவிப்பு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி
தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வரவேற்பும் கோரிக்கையும் வைத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின்
மாநிலத்தலைவரும் ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினருமான
செ.நா.ஜனார்த்தனன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..
தமிழக அரசால் எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளையும், வழக்குகளையும்
திரும்ப பெற, அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஏற்கனவே
என்னிடம் நேரில் கோரிக்கை வைத்திருந்தனர்.
இக்கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, மறப்போம், மன்னிப்போம் என்ற உயரிய
கருத்தை மனதில் கொண்டு, வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட
அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டு, நிலுவையில்
உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தையும்
அம்மாவின் அரசு கைவிடுகிறது என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பினை
வரவேற்கின்றோம். ஆனால் அதே வேளை மாண்புமிகு அம்மாவின் அரசால்
அறிவிக்கப்பட்ட புதிய ஓய்வூதியத்திட்டத்தினை இரத்து செய்து பழைய ஓய்வூதிய
திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என்ற அறிவிப்பு குறித்து அரசி மௌனமாக
இருக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் 19.02.2016 அன்று
பேரவை விதி எண்.110ன் கீழ் ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அதில்,
1.04.2003 முதல் அரசுப்பணியில் சேர்ந்துள்ள அரசு அலவலர்களிடமிருந்து
பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதியப் பங்களிப்புத்தொகையும், அரசின்
பங்களிப்புத் தொகையும் இவ்வற்றிற்கான வட்டித் தொகையும் அரசுக்கணக்கில்
தனியே வைக்கப்பட்டுள்ளன. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணி
ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களின் வாரிசுதார்ர்கள் ஆகியோருக்கு
வழங்கப்பட வேண்டிய தொகை உடனடியாக வழங்கப்படும் என்றும் பங்களிப்பு
ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினையே
செயல்படுத்திட வேண்டும் என பல்வேறு அரசு அலுவலர் சங்கங்கள் கோரி
வருகின்றன. இந்த கோரிக்கை குறித்து தீவிரமாக ஆராயப்பட வேண்டும்.
வல்லுநர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தக்க முடிவு எடுக்கப்படும்
என்று கூறி இருந்தார்.
மேலும் 2016ஆம் ஆண்டு அஇஅதிமுக தனது தேர்தல் அறிக்கையில் பக்கம் 36ல்
அரசு ஊழியர் நலன் என்ற 46வது பத்தியில் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்
படுத்துவது குறித்து வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின்
அறிக்கை பெற்றவுடன் பழைய ஓய்வூதிய திட்டமே தொடர்ந்திட நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது*.
இவற்றின் மீது தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பழைய ஓய்வூதிய
திட்டமே தொடர்ந்திட நடவடிக்கை விரைந்து அறிவித்து நடைமுறை படுத்திட
கோருகின்றோம்.
மேலும் ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் நிர்வாகிகளை மாண்புமிகு தமிழக முதல்வர்
அவர்கள் அழைத்து பேசி எங்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றிட
கோருகின்றோம்.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 600 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை
நிரப்பிட வேண்டும். கடந்த 10ஆண்டுகளாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தினால்
நியமிக்கப்பட்டு பணியாற்றிவரும் தொழிற்கல்வி ஆசிரியர்களை பணிவரன்முறை
செய்திட கோருகின்றோம்.
இவ்வாறு அதில் செ.நா. ஜனார்த்தனன் கூறி உள்ளார்.