சேலம் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: பெறப்பட்ட 210 மனுக்களுக்கும் விரைந்து தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் உத்தரவு:
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த மாதம் தமிழக அரசு அறிவித்துள்ள பல்வேறு சலுகைகளுடன் கூடிய ஊரடங்கு 28 .2 .2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், நோய்த்தொற்று அதிகமாக இருந்த காலங்களில் மனுக்களை தபால் மூலமும் ஆட்சியர் வளாகத்தில் உள்ள பெட்டிகள் மூலமும் பொதுமக்களிடமிருந்துபெறப்பட்டன. பல மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான், நேரில் மனுக்களை அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதையடுத்து அதிகப்படியான பொதுமக்கள் சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகைபுருந்திருந்தனர். சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 210 மனுக்கள் பெறப்பட்டு, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, அனைத்து மனுக்கள் மீதும் துரித நடவடிக்கை மேற்கொண்டு, உடனடியாக தீர்வு காண வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டார். முன்னதாக, சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் 26 மாற்றுத்திறனாளிகளுக்கு 5.25 லட்சத்திற்கான வங்கிக்கடன் மானியம், மூன்று சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் சுமார் 7 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் )சத்தியபால கங்காதரன், மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) தியாகராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி. சரளா, மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, துணை ஆட்சியர் (பயிற்சி)செல்வி.கனிமொழி உள்ளிட்ட தொடர்புடைய அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.