திருவள்ளூரில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் : மாவட்ட ஆட்சியர் குழந்தைகளுக்கு சொட்டு மருந்துகளை வழங்கி துவக்கி வைத்தார் :
திருவள்ளுர் நகராட்சி அலுவலக வளாகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்துகளை வழங்கி துவக்கி வைத்தார்.
திருவள்ளுர் மாவட்டத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 2,52,072 குழந்தைகளுக்கு 1347 நிலையான மையங்களிலும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் 56 மையங்களிலும் மற்றும் 45 நடமாடும் மையங்கள் மூலமாகவும் மொத்தமாக 1448 முகாம் மூலமாகவும் மற்றும் செங்கல் சூளை போன்ற தொலை தூர இடங்களிலும் நடைபெற்றது. இம்முகாமில் சுகாதாரப் பணியாளர்கள், சமூக நலத்துறைப் பணியாளர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவ-மாணவியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ரோட்டரி சங்கப் பிரதிநிதிகள் என திருவள்ளுர் சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் 5296 நபர்களும், மற்றும் பூவிருந்தவல்லி சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் 908 நபர்களும் என மொத்தம் 5863 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இம்முகாமில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து பணிக்காக பிற துறையினைச் சார்ந்த 38 வாகனங்கள் ஈடுபடுத்தப்படவுள்ளது. திருவள்ளுர் நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற இந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் 200-க்கும் மேற்ப்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ராணி, திருவள்ளுர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் கே.ஆர். ஜவஹர்லால், மாவட்ட உதவி திட்ட மேலாளர் மோகன், மாவட்ட திட்ட அலுவலர் சைத்தன்யா, மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
===============================================================================