திருவள்ளூரில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற 36 அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் : மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார் :
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை சார்பாக மனித நேய வார நிறைவு விழாவில் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற 36 அரசு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி பரிசுகளை வழங்கி பேசினார்.
இந்தியாவின் முதன்மை மாநிலம் என்ற நிலையை அடைந்திட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் இலட்சியத்தை நிறைவேற்றிடும் வகையில், சிறப்பான நிர்வாகத்தின் மூலம் தமிழ்நாடு முன்னேற்றம் கண்டு வருகிறது. தீண்டாமைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொண்டாடப்பட்டு வரும் இத்தகைய மனித நேய வாரத்தின் நிறைவு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அரசு வழங்கி வரும் சிறப்பான திட்டங்களின் மூலம் மாணவ, மாணவியர் நல்ல முறையில் கல்வி கற்று, எதிர்காலத்தில் மனிதநேயமுள்ள சிறந்த மனிதர்களாக திகழ வேண்டும் என்றும், எல்லா நலமும் பெற்று உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என நெஞ்சார வாழ்த்துகிறேன். விளிம்புநிலையில்லுள்ள மக்கள் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும், சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி, சமமானதொரு நிலையில் வாழக்கூடிய சமதர்ம சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும் என்ற இலட்சியத்தை நோக்கி அரசு தொடர்ந்து செயல்படும். இறுதியாக கட்டுரை போட்டிகளில் பங்கேற்ற மற்றும் வெற்றிபெற்ற 36 மாணவ மாணவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்து கொள்கிறேன் என மாவட்ட வருவாய் அலுவலர் கூறினார்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெ.வெற்றிச்செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தி.சரவணன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணை காவல் கண்காணிப்பாளர் டி.லோகநாதன், தாட்கோ மாவட்ட மேலாளர் மா.கு.தேவசுந்திரி அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
==============================================================================