திருவண்ணாமலை அருகே அகதிகள் முகாமில் மத்திய அரசு அதிகாரிகள் குழு திடீர் ஆய்வு இந்தியகுடியுரிமை வழங்க வலியுறுத்தல்……
திருவண்ணாமலையை அடுத்த அத்தியந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகோட்டாங்கல் பகுதியில் இலங்கை தமிழர் அகதிகள் முகாம் அமைந்துள்ளது.இங்கு 100-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.இவர்கள் அடிப்படை வசதிகள் பெற்று உள்ளார்களா? அவர்களுக்கு என்னென்ன வசதிகள் தேவைப்படுகிறது ?என்பது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் குழுவினர் ஆண்டுதோறும் ஆய்வுகள் மேற்கொள்வது வழக்கம்.
அதே போல் 2021-ம் ஆண்டுபிறந்ததையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் சின்னகோட்டாங்கல் அகதிகள் முகாமில் இணைஇயக்குனர் ரமேஷ் மற்றும் முத்துக்குமார்,ரெங்கராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அகதிகள் முகாமில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கி ஆதார் கார்டு வழங்க வேண்டும்.படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்காததால் அவர்கள் கூலி வேலைக்கு செல்ல நேரிடுகிறது.எனவே அவர்களுக்கு படிப்புக்கேற்ற வேலை வழங்க வேண்டும்.முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்.
கல்லூரிகளில் படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு ஓராண்டு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதனை ஒவ்வொரு ஆண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு சார்பில் மானிய விலையில் சிலிண்டர் வழங்க வேண்டும் . ஏரி தண்ணீர் சிலவீடுகளுக்களை சூழ்ந்துள்ளது.அது வடிந்து செல்ல கால்வாய் வெட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியின்போது ஊராட்சி மன்ற தலைவர் முருகன் , ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் முருகன் கூறும்போது, இலங்கை அகதிகள் முகாமில் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது .சமீபத்தில் ரூ 24 லட்சம் செலவில் கிராம சாலைகள் திட்டம் மூலம் சின்ன கோட்டாங்கல் முதல் பெரிய கொட்டாங்கல் வரை தார்சாலை அமைக்க பட்டுள்ளது.
மேலும் 100 நாள் திட்டத்தில் வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொது கழிவறை கட்டிக் கொடுக்கப்பட உள்ளது என்றார்.
பின்னர் அடிஅண்ணாமலை,போளூர்,
ஆரணி, வந்தவாசி உள்ளிட்ட இலங்கை அகதிகள் முகாம்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.