சேலம் நங்கவள்ளி ஊராட்சியில் மேற்கொள்ளபட்டுவரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்:மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு..
சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2016 – 17 ஆம் ஆண்டு முதல் 2020 – 21ஆம் ஆண்டு வரை ரூபாய் 114.08 கோடி மதிப்பீட்டில் 11 ஆயிரத்து 427 வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை பல்வேறு நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 63.11 கோடி மதிப்பீட்டில் 9 ஆயிரத்து 590 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் ரூபாய் 50.97கோடி மதிப்பீட்டில் 1837 பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து குடிநீர்,கழிப்பிடம், தெருவிளக்கு,சாக்கடை வசதி உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் எனவும் மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் சாணாரப்பட்டி ஊராட்சி மணற்காடு அருந்ததியர் காலனியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 5.14 லட்சம் மதிப்பீட்டில் பிலேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூபாய் 2.51 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 17.64 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சாணாரப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினையும்,8.70 லட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தையும், நரிகல்லூர் பகுதியில் முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 1.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, கூடுதல் இயக்குனர் /திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அருள்ஜோதி அரசன், செயற்பொறியாளர் சடையப்பன், உதவி செயற்பொறியாளர் யோகராஜன், நங்கவள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்திய விஜயன், அசோக்ராஜ், ஒன்றிய பொறியாளர் ஸ்ரீனிவாசன், உதவி பொறியாளர் முத்துசாமி, மேற்பார்வையாளர் சரவணன் உட்பட தொடர்புடைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.