மதுரையில் கொரோனா தடுப்பு ஊசி போடும் நிகழ்ச்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

Loading

மதுரையில் கொரோனா தடுப்பு ஊசி போடும் நிகழ்ச்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
கடந்த ஒரு ஆண்டாக கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப் படைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இதற்கு தடுப்பு ஊசி இல்லாத சூழ்நிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கை முறையிலேயே மருத்துவ வசதி செய்யப்பட்டு வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் இறப்பு சதவிகிதம் குறைந்துள்ளது. தொற்று நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் துவக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை மதுரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை துவக்கி வைத்தார். அதன் பிறகு முதலமைச்சர் கூறியதாவது: பிரதமரின் தீவிர முயற்சியால் தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த தடுப்பூசி தற்போது தமிழகத்தில் போடும் பணி துவக்கப்படுகிறது. இதற்காக தமிழகத்தில் போடுவதற்காக 266 இடங்களில் ஒத்திகை முகாம்கள் நடத்தப்பட்டன. தற்போது 366 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடக்க உள்ளது. இதில் முதல் கட்டமாக 166 இடங்களில் போடப்படுகிறது. தற்போது முன் களப்பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

முதல் தடுப்பூசி போட்ட 28வது நாளில் இரண்டாவது தடுப்பூசி போடப்படும். இரண்டாவது கட்ட தடுப்பூசி போட்ட பிறகு 14 நாட்கள் என மொத்தம் 42 நாட்கள் ஊசி போட்டுக் கொண்டவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளாகும். இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், தொற்றுநோய் பரவாமல் தடுக்க வேண்டும் என்பதற்காகவே ஊசி போடும் நிகழ்ச்சி துவங்கி உள்ளது. முதலில் கோவிஷீல்டு 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 தடுப்பூசிகளும், கோவாக்ஸின் 20,000 தடுப்பூசிகளும் வந்துள்ளன. இவை டாக்டர்கள், சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதல் தடுப்பூசியை தமிழக மருத்துவ சங்க செயலாளர் செந்தில் போட்டுள்ளார். மருத்துவத் துறை சுகாதாரத் துறை என தற்போது ஊசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்த தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது.

பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைத்துள்ளார். தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் நிகழ்ச்சி துவங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது துவங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை 650 க்கும் கீழ் குறைந்துள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் சமூக விலகலை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து, வழக்கம் போல் கைகளை சுத்தமாக கழுவி வந்தால் நோய் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற முடியும் என்றார்.துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் அன்பழகன், டீன் சங்குமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *