திருச்சி நம்பர் 1 டோல்கேட் பகுதியில் விஜய பிரபாகரனுக்கு தேமுதிகவினர் உற்சாக வரவேற்பு.

Loading

திருச்சி மாவட்டத்தில் நடந்த பொங்கல் விழாவில் கலந்துகொள்ள வந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு தேமுதிகவினர் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் பாலக்கரையில் நகர, ஒன்றிய தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1000 பேருக்கு பொங்கல் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமை வகித்தார். நகர செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் செல்லதுரை வரவேற்றார். கொட்டும் மழையில் கூடியிருந்த மக்களிடையே தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசியதாவது: தேமுதிக மிகவும் கட்டுப்பாட்டுடன் உள்ள கட்சி. விஜயகாந்த் உடல்நிலை நன்கு தேறி வருகிறது என்றால் அதற்கு தொண்டர்களின் பிரார்த்தனை மட்டுமே காரணம். எந்த கட்சிக்கும் தேமுதிக சளைத்த கட்சியல்ல. அதிமுக, திமுக என்ற இரு ஜாம்பவான் கட்சிகள் இருந்த போதே எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்தது. தேமுதிகவில் இருந்து ஒரு சிலர் வெளியேறி வருவதால் , குப்பைகள் அகற்றப்பட்டு கட்சி இப்போது தான் சுத்தமாகி உள்ளது. ஸ்டாலின் சென்னையை சுத்தம் செய்தாரோ இல்லையோ , எங்கள் கட்சியை தற்போது சுத்தம் செய்து வருகிறார். பொங்கல் என்றாலே சூரிய பகவானை வழிபடுவது தான் வழக்கம். தற்போது மழை பெய்து கொண்டுள்ளதால் சூரியனைப் பார்க்க முடியவில்லை . இதைப் பார்க்கும் போது 2021-ல் சூரியனுக்கு வழியே விடாமல் செய்வதற்கு தான் மழை பெய்து கொண்டிருக்கிறதோ எனத் தோன்றுகிறது. தமிழ், தமிழ் என்று சொல்லி இந்திக்காரரான பிரசாந்த் கிஷோரை அரசியல் ஆலோசகராக வைத்துக் கொண்டு திமுக அரசியல் நடத்தி, தமிழக மக்களை முட்டாளாக்கி வருகிறது. 20 21-ல் தேமுதிக கூட்டணி வைத்தாலும், எந்த முடிவு எடுத்தாலும் அனைவரும் ஒன்றுபட்டு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். என்றார்.

பின்னர் பொங்கலை முன்னிட்டு பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு, நெய், முந்திரி, திராட்சை , முழுக் கரும்பு உள்ளடக்கிய சுமார் ரூ.500 மதிப்புள்ள தொகுப்புப் பையை பொது மக்களுக்கு வழங்கினார்.நிகழ்ச்சி துவங்கியது முதல் முடியும் வரை மழை இடைவிடாமல் பெய்து கொண்டிருந்தது.முன்னதாக விஜய பிரபாகரனுக்கு திருச்சி கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் தேமுதிக திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பி.எஸ். குமார், மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் வி.பி.தங்கமணி ஆகியோர் தலைமையில் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அங்கு தேமுதிக கட்சி கொடியை விஜயபிரபாகரன் ஏற்றிவைத்தார். திறந்த காரில் நின்று அங்கு கூடியிருந்த தொண்டர்களை நோக்கி கையசைத்து உற்சாகப்படுத்தினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *