பாஜக தலைவர் எல்.முருகனுக்கு எதிர்ப்பு கூட்டத்தில் கல் வீச்சால் பரபரப்பு…
மதுரையில் பா.ஜ.க., சார்பில் ‘நம்ம ஊர் பொங்கல்’ விழா நடக்கிறது. இவ்விழாவில் பா.ஜ.க., தலைவர் எல்.முருகன் கலந்து கொண்ட கூட்டத்தில் கல்வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையில் மாவட்ட புறநகர் மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல் விழா திருப்பாலையில் நடந்தது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக மாநில பா.ஜ.க., தலைவர் எல்.முருகன் நேற்று காலை வந்தார். அவரை நிர்வாகிகள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். திருப்பாலை பெரியார் நகரை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எல்.முருகன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனால் போலீசார் அவர்களை எச்சரித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் எல்.முருகனை மாட்டு வண்டியில் அழைத்து சென்றனர். அப்போது அங்கு திரண்டிருந்த 50க்கும் மேற்பட்டவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு எல்.முருகன் போலீஸ் பாதுகாப்புடன் திருப்பாலைக்கு மந்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் அங்கு மீண்டும் திரண்டு வந்த 300க்கும் மேற்பட்டோர் பொங்கல் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் கோஷம் எழுப்பினர்.
மேலும் அங்கு நின்று கொண்டிருந்த சில வாகனங்கள் கீழே தள்ளினர். சிலர் அந்த கல் வீசி தாக்கினர். இதனை தொடர்ந்து பா.ஜ.க., நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் நடு வழியில் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு அவர்கள் மீண்டும் திருப்பாலைக்கு திரும்பினார். இருந்தபோதிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டனர். இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.