போலீஸ் பாதுகாப்பு வழங்கததால் வணிக வளாகத்திற்கு சீல் வைக்க சென்ற அதிகாரிகள் ஏமாற்றம்.

Loading

சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த நரசிங்கபுரம் நகராட்சி 4வது வார்டு, சேலம்-கடலூர் சாலையில் உரிய அனுமதி பெறாமல் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதன்படி, WP 18953/2020 வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்றம், நகரமைப்பு சட்டத்தின்படி எவ்வித அனுமதியும் பெறாத கட்டிடத்தினை சீல் வைத்து மூட, மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டது. இதன் பேரில் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டி மாவட்ட நகர் ஊரமைப்பு இயக்குனர் அனுமதி பெற்று, கட்டிடத்தை மூடி முத்திரையிடுவதற்காக நகராட்சி ஆணையாளர் சேகர், கட்டிட ஆய்வாளர் ஜெயவர்மன் உள்ளிட்டோர் நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பாக, ஆத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர், டவுன் காவல் ஆய்வாளர் மற்றும் மின் வாரியத்திற்கு கடிதம் கொடுத்தனர். இதனை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள், நகராட்சி கட்டிட ஆய்வாளர் உள்ளிட்ட நகராட்சி ஊழியர்கள் மற்றும் நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலக பணியாளர் பார்வதி ஆகியோர் அப்பகுதிக்கு சென்றனர். ஆனால் பல மணி நேரம் ஆகியும் அப்பகுதிக்கு போலீஸ் வராததால் விதிமீறி கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தை மூடி முத்திரையிட முடியாமல் அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது; காவல்துறையினருக்கு இரண்டு முறை உரிய தகவல் கொடுத்தும் நகராட்சி பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வராததால் உரிய அனுமதி பெறாத வணிக வளாக கட்டிடத்தை மூடி முத்திரை இடவில்லை என்று கூறினர். மேலும் உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தும் அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *