திருச்சி மாவட்டத்தில் 24,587 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் வளர்மதி ஆகியோர் வழங்கினர்

Loading

திருச்சி: திருச்சியில் இன்று 24 ஆயிரத்து 587 விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வழங்கினர்.
பிளஸ் 1 படிக்கும் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் 2020-21 ஆம் ஆண்டிற்கான மிதிவண்டிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வகையில் திருச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல் நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீரங்கம் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இந்த விழாக்கள் நடைபெற்றது. இந்த விழாக்களில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டு 10 ஆயிரத்து 755, மாணவர்கள் 13 ஆயிரத்து 832 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 587 பேருக்கு மிதிவண்டிகளை வழங்கினர். இந்த விழாவில் திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் வரவேற்றார். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமை வகித்தார். இந்த விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில், திருச்சி மாவட்டத்தில் இன்று 9.68 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும். அரசு கொடுக்கும் சலுகைகளை பயன்படுத்தி நல்ல முறையில் பயின்று வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றார்.
இந்த விழாவில் அமைச்சர் வளர்மதி பேசுகையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 7.5 சதவீத இட ஒதுக்கீடு திட்டத்தால் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழக அரசு கொண்டுவந்த உயர் கணினி பயிற்சித் திட்டத்தின் மூலம் தனியார் பள்ளி மாணவர்களை விட அரசு பள்ளி மாணவர்கள் அதிகம் திறன் பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி, அரசு தொழில்நுட்பக் கல்லூரி, சட்டப் பல்கலைக்கழகம், ஐஐஐடி, ஐடிஐ, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேளாண் ஆராய்ச்சி கல்லூரி உள்ளிட்ட 7 அரசு உயர்கல்வி நிறுவனங்களை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்துள்ளார். அதை அனைவரும் பயன்படுத்தி நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும் என்றார்.
இந்த விழாவில் ஆட்சியர் சிவராசு பேசுகையில், நீட் தேர்வுக்காக அரசு கொடுத்த பயிற்சியின் மூலம் 10 அரசுப்பள்ளி மாணவர்கள் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் இணைந்துள்ளனர். இந்த ஆண்டு 30 பேரை இந்த பயிற்சியின் மூலம் தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு என்று அரசு கொடுக்கும் இந்த தனிப்பயிற்சி மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றார்.
இந்த விழாவில் ஆவின் தலைவர் கார்த்திகேயன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *