தேனி மாவட்டம் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ்55 பணிகள் ரூ.1869.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Loading

தமிழக அரசு நாட்டின் முதன்மைத் தொழிலாகவும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு
அடித்தளமாகவும், கிராமப்புற மக்களின் வாழ்வுக்கு ஆதாரமாகவும் விளங்குகின்ற வேளாண்
தொழிலை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்களை தீட்டி சிறப்பாக
செயல்படுத்தி வருகிறது.

மேலும், தமிழக அரசு தமிழகத்தில் வறட்சியை எதிர்கொள்ளவும், நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடவும் விவசாயிகளின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்கும் பண்டைய குடிமராமத்து திட்டத்தினை செயல்படுத்திட உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் உள்ள குளங்களில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள்,
ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல்
மற்றும் கலிங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், தேனி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) கீழ் பெரியாறு , வைகை வடிநிலக்கோட்டம் மற்றும் மஞ்சளாறு வடிநிலக்கோட்டம் உட்பட்ட
பகுதிகளில் குடிமராமத்துத்திட்டத்தின் கீழ் 2020-21-ஆம் நிதியாண்டில் விவசாயிகளின் பங்களிப்புடன் மொத்தம் 9 பணிகள் ரூ.445.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட போ.அம்மாபட்டி கிராமத்தில் போ.மீனாட்சிபுரம் கண்மாய் ரூ.86.00 இலட்சம் மதிப்பீட்டிலும், சில்லமரத்துப்பட்டி சுத்தாகங்கை ஓடை முதல் அம்மாகுளம் கண்மாய் வரை உள்ள வாய்க்கால் ரூ.35.00 இலட்சம்
மதிப்பீட்டிலும், டொம்புச்சேரி கிராமத்தில் சுத்தாகங்கை ஓடை முதல் வைரவ கண்மாய் வரை உள்ள
வாய்க்கால் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டிலும், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட தேவாரம்
சின்னதேவி குளம் கண்மாய் ரூ.32.00 இலட்சம் மதிப்பீட்டிலும், சின்னஓவுலாபுரம்
பெரியவூத்து கண்மாய் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டிலும், பொட்டிபுரம் எர்ணாகுளம் கண்மாய் ரூ.34.00 இலட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட தென்கரை, சோத்துப்பாறை புதிய கண்மாய் ரூ.98.00 இலட்சம் மதிப்பீட்டிலும், ஜெயமங்கலம் வெட்டுவான் குளம் கண்மாய்
ரூ.55.00 இலட்சம் மதிப்பீட்டிலும், தாமரைக்குளம் நந்தியாபுரம் கண்மாய் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டிலும் கண்மாய்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும்,
ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட மயிலாடும்பாறை சிறுகுளம் கண்மாய் ரூ.101.00 இலட்சம் மதிப்பீட்டில் கண்மாய்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்
மூலம் இக்கண்மாய்களை சுற்றிலுள்ள 2821.45 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேலும், தேனி மாவட்டத்தில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2016-17-ஆம் நிதியாண்டில் 10 பணிகள் ரூ.68.50 இலட்சம் மதிப்பீட்டிலும், 2017-18-ஆம்
நிதியாண்டில் 5 பணிகள் ரூ.192.00 இலட்சம் மதிப்பீட்டிலும், 2019-20-ஆம்
நிதியாண்டில் ரூ.1062.80 இலட்சம் மதிப்பீட்டிலும், நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் 10 பணிகள் ரூ.546.00 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 55 பணிகள் ரூ.1869.30 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் கால்வாயில் தண்ணீர் தங்கு தடையின்றி சென்று கண்மாயை விரைவில் அடையவும் கண்மாயில் முழுக் கொள்ளளவில் தண்ணீரை சேகரிக்கவும்,மேலும் வெள்ளக்காலங்களில் வாய்க்கால் மற்றும் கண்மாயில் உடைப்பு
ஏற்படாமல் இருப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை செயல்படுத்தியதன் மூலம் தேனி மாவட்டத்தில் 9210.47 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனவசதி உறுதி செய்யப்படுவதுடன், இக்கண்மாய்களை சுற்றியுள்ள
கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தேவை மற்றும் கால்நடைகளுக்கு தேவையான
தண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட
தாமரைக்குளம்,நந்தியாபுரம்,கண்மாய், ஜெயமங்கலம்,வெட்டுவான் குளம் கண்மாய், தென்கரை,
சோத்துப்பாறை புதிய கண்மாய் ஆகிய கண்மாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) மஞ்சளாறு வடிநில கோட்ட
செயற்பொறியாளர் எம்.கார்த்தியேன் அவர்களுடன் செய்தியாளர்கள் பயணத்தின் போது
பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *