காசி தமிழ் சங்கம 5.o விழாவை துணை ஜனாதிபதி 28-ந் தேதி தொடங்கி வைக்கிறார்
![]()
காசி தமிழ் சங்கம 5-வது விழாவை துணை ஜனாதிபதி 28-ந் தேதி தொடங்கி வைக்கிறார்
உத்தரபிரதேச மாநில முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்கிறார்
வாரணாசி, நவ.26-
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் 5-வது காசி தமிழ் சங்கம விழாவை உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் முன்னிலையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 28-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.
5-வது பதிப்பு
காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக நீடிக்கும் கலாசார, ஆன்மிக மற்றும் கல்வித்தொடர்புகளை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்வின் 5-வது பதிப்பு 28-ந் தேதி தொடங்குகிறது. வாரணாசியில் கங்கை நதியின் கரையில், நமோ கட்டில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வை, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். இந்த நிகழ்வு டிசம்பர் மாதம் 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதன் நிறைவு விழாவில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொள்கிறார்.
இந்த ஆண்டின் நிகழ்வு, புகழ்பெற்ற தமிழ்ப்புலவரும், உலக பொதுமறை தந்தவருமான திருவள்ளுவரின் ‘திருக்குறளை’ மையமாக கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் தமிழ் இலக்கியம், மொழி மற்றும் திருக்குறளில் பொதிந்துள்ள அறநெறிகளை அறிமுகப்படுத்துவதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.
போட்டி
இந்த நோக்கத்தை அடைவதற்காக, 1,380 உயர்கல்வி நிறுவனங்களில் ‘திருக்குறள் அப்யாஸ்’ (திருக்குறள் பயிற்சி) என்ற போட்டி தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை மந்திரி பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தார்.
இந்த போட்டியில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு, 10,000 ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படும். ஒவ்வொரு கல்வி நிறுவனத்தில் இருந்தும் ஒரு மாணவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் மற்ற மாணவர்களையும் திருக்குறளைப் பற்றி அறிந்துகொள்ள ஊக்குவிப்பார்.
50 தமிழ் ஆசிரியர்கள் வருகை
‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்வின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் இருந்து 50 ஆசிரியர்கள் வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல உள்ளனர். அவர்கள் அங்குள்ள மாணவர்களுக்கு தமிழ் மொழியையும், பழமையான நூலான திருக்குறளையும் அறிமுகப்படுத்துவார்கள். 1,330 குறள்களைக் கொண்ட இந்த நூல், அறநெறிகள், வாழ்வியல் விழுமியங்கள் மற்றும் நன்னடத்தை குறித்த ஆழமான கருத்துகளை வழங்குகிறது.
வெள்ளிக்கிழமை வரும் முதல் குழு
‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து பிரதிநிதிகளின் வருகை தொடங்கியுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து சுமார் 200 பிரதிநிதிகளுடன் முதல் சிறப்பு ரெயில் ஏற்கனவே புறப்பட்டுவிட்டது. இது வெள்ளிக்கிழமை இரவு பனாரஸ் ரயில் நிலையத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 12-ந் தேதி வரை தெற்கு ரயில்வே மொத்தம் 7 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. சென்னை சென்டிரல், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த ரயில்கள், பிரதிநிதிகள் காசிக்கு செல்வதற்கு வசதியாக அமையும்.
இட்லி-சாம்பார், தயிர் சாதம்
தமிழ்நாட்டில் இருந்து வரும் விருந்தினர்களின் உணவு மற்றும் உபசரிப்புக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி, உப்புமா, ரசம், எலுமிச்சை சாதம் மற்றும் தயிர் சாதம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய தென்னிந்திய உணவுகள் பரிமாறப்படும். குறிப்பாக, இந்த உணவுகளைத் தயாரிப்பதற்காக தமிழ்நாட்டிலிருந்தே சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். மசாலாப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களும் அங்கிருந்தே கொண்டு வரப்படுகின்றன.
விருந்தினர்களுக்கான தங்குமிடம், உணவு மற்றும் சுற்றுலா இடங்களைப் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பு ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்குவதற்காக நகரின் பல்வேறு ஓட்டல்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பயணத்தின் போது, பிரதிநிதிகள் காசியைப் பார்வையிடுவதுடன், பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தியில் உள்ள முக்கிய ஆன்மிகத் தலங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
பனாரஸ் ரயில் நிலையத்தில் வரவேற்பு
தமிழ்நாட்டில் இருந்து வரும் விருந்தினர்களுக்கு பனாரஸ் ரயில் நிலையத்தில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்படும். அவர்களின் நெற்றியில் திலகம் இட்டும், மாலை அணிவித்தும் வரவேற்பு அளிக்கப்படும். இந்த வரவேற்பின்போது சங்கு முழக்கங்கள், மேள தாளங்கள் மற்றும் மலர் தூவுதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெறும். ரயில்வே, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த நிகழ்வின் போது உடனிருப்பார்கள். ரயில் நிலையத்தில் இருந்து விருந்தினர்கள் மின்சார வாகனங்கள் மூலம் அவர்கள் தங்க வேண்டிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
ஏற்பாடுகளைச் செய்யும் பி.எச்.யு.-ஐ.ஐ.டி.
‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்வை ஒருங்கிணைப்பதில் பி.எச்.யு. மற்றும் ஐ.ஐ.டி. ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. பி.எச்.யு. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அஜித் குமார் சதுர்வேதி கூறுகையில், “இந்த நிகழ்வின் முதல் பதிப்பில் இருந்தே பல்கலைக்கழகம் அதன் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது. காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே கருத்துகள், மரபுகள் மற்றும் தத்துவங்களை பரிமாறிக்கொள்வதற்கான ஒரு முக்கிய தளமாக இந்த நிகழ்வு விளங்குகிறது. பங்கேற்பாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் வகையில் பல்கலைக்கழகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது” என்றார்.
பேராசிரியர் அமித்பத்ரா கூறுகையில், “இந்த நிகழ்வு நாட்டின் வளமான நாகரிக பாரம்பரியத்தை கொண்டாடுகிறது. இது காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான கலாசார, அறிவுசார் மற்றும் ஆன்மிக பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தும். இந்த நிகழ்வை சிறப்பாக நடத்துவதை உறுதிசெய்ய, சென்னை ஐ.ஐ.டி., வாரணாசி பி.எச்.யு. மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி வருகின்றன.

