தந்தையை அடித்த மகள்,மருமகன் மீது முதியவர் புகார்

Loading

ஈரோட்டில் பூர்வீக நிலத்தை ஆக்கிரமித்து, வயதான தந்தையை அடித்து விரட்டிய மகள், மருமகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதியவர் புகார்!
ஈரோடு நவம்பர் – 05
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், கன்னப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் S. மாரிமுத்து (வயது 70). இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ஆண் வாரிசுகள் யாரும் இல்லை.
மாரிமுத்துவுக்கு கன்னப்பள்ளி கிராமத்தில் சர்வே எண்கள் 350/1, 351/3, 352/3-ல் மொத்தம் 4.33 ஏக்கர் விவசாய நிலம் சொந்தமாக உள்ளது.
வயது முதிர்வு காரணமாக தம்மால் நேரடியாக விவசாயம் செய்ய இயலாததால், கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் மூன்றாம் நபருக்கு வாய்மொழி ஒப்பந்தத்தின் மூலம் குத்தகைக்கு விட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தம்மையும், தனது மனைவியையும் காப்பாற்றி வருகிறார்.
இந்நிலையில், சிங்கம்பேட்டை கிராமம், ஆனந்தம்பாளையத்தில் வசிக்கும் இவரது மூன்றாவது மகளான ராஜலட்சுமி மற்றும் அவரது கணவர் குமார் ஆகியோர், கடந்த 20.08.2025 அன்று மாரிமுத்துவிடம் பணம் கொடுத்து நிலத்தைக் குத்தகைக்கு எடுத்ததாகக் கூறி போலியான ஆவணம் ஒன்றைத் தயார் செய்துள்ளனர்.
மேலும், அதில் மாரிமுத்துவின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு, ஏற்கெனவே குத்தகையில் இருந்த நபரை நிலத்தை விட்டு அகற்றிவிட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இது குறித்து மாரிமுத்து கேட்டபோது, அவர்கள் உரிய பதிலளிக்காமல் மிரட்டியதோடு, கடந்த 26.02.2026 அன்று மாலை சுமார் 5:00 மணியளவில் மாரிமுத்து மற்றும் அவரது மனைவியை வீட்டை விட்டு வெளியே இழுத்து அடித்துத் துரத்தியுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட முதியவரும் அவரது மனைவியும் தற்போது வெடிக்காரன்பாளையத்தில் உள்ள தனது மூத்த மகள் மகேஸ்வரியின் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
வயதான காலத்தில் தங்களை வீட்டை விட்டு அடித்து விரட்டிய மகள் ராஜலட்சுமி மற்றும் மருமகன் குமார் ஆகியோர் மீது வருவாய்த்துறை மூலம் உரிய விசாரணை நடத்தி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள தமது நிலம் மற்றும் வீட்டை மீட்டுத் தருமாறு முதியவர் மாரிமுத்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.
0Shares