பெண் மீது தாக்குதல்குற்றவாளி, சார்பு ஆய்வாளர் மீது புகார்

Loading

ஈரோட்டில் பெண் மீது தாக்குதல்: குற்றவாளிகள் மற்றும் சார்பு ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி எஸ்பியிடம் புகார்
ஈரோடு வெண்டிபாளையம் குப்பைகாடு பகுதியைச் சேர்ந்த பானு (27) என்பவர், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூலை 25-ஆம் தேதி, கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த பரிதா, அவரது மகன் அன்சாரி மற்றும் அவருடன் வந்த நபர்கள் அத்துமீறி எனது வீட்டிற்குள் நுழைந்தனர். சமையல் அறையில் இருந்த என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, தரதரவென வெளியே இழுத்து வந்து கடுமையாகத் தாக்கினர். மாப் போடும் இரும்பு பைப் மற்றும் செருப்பால் அடித்ததுடன், சுவற்றிலும் மோதச் செய்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் மயக்கமடைந்த நான், ஈரோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று 7 நாட்களுக்குப் பிறகு உயிர் பிழைத்து வீடு திரும்பினேன். இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு (FIR) செய்யப்பட்டு 7 நாட்கள் ஆகியும், தாக்குதலில் ஈடுபட்ட பரிதா, அன்சாரி, பிசியோதெரபி ஆனந்த், தாஜ் பாய் உள்ளிட்ட நபர்களை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. மேலும், இச்சம்பவம் குறித்து விசாரிக்கும் சார்பு ஆய்வாளர் பரமேஸ்வரன் என்பவர், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், என்னை வீட்டை காலி செய்யுமாறு தொலைபேசி வாயிலாக மிரட்டி வருகிறார். மருத்துவமனையிலிருந்து திரும்பிய என்னிடம் அநீதியாக நடந்து கொள்வதோடு, எனது குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தும் நோக்கில் செயல்படுகிறார். இது மனித உரிமை மீறலாகும். எனவே, எனது உயிருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கி, தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீதும், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு என்னை மிரட்டி வரும் சார்பு ஆய்வாளர் பரமேஸ்வரன் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
0Shares